2019 உயிர்த் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான செனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிள்ளையான், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்க திணைக்களமொன்று விசாரணைகளை மேற்கொள்வதாக வருத்தம் தெரிவித்தார்.
“சிஐடி போன்ற துறைகள் சில தனிநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாமல், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்,” என அவர் கூறினார்.
தனது 5 மணி நேர வாக்குமூலத்தின் போது, தமிழில் வாக்குமூலத்தை வழங்க விரும்புவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்றைய தினம் அறிவித்ததாகவும், அதன் பின்னர், அது தொடர்பான மொழி பெயர்ப்புப் பணிகளைத் தயாரிப்பதற்காக இன்று முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான செனல் 4ஆவணப்படத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னிலையான அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2023 செப்டெம்பரில் பிரித்தானிய ஊடகமான செனல் 4 ஒரு காணொளியை வெளியிட்டதோடு குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டும் இலங்கை அரசாங்கத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்த அதிகாரிகளின் பிரத்தியேக நேர்காணல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவர்களில் பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானாவும் ஒருவர்.
‘செனல் 4’ காணொளியில் தோன்றிய அசாத் மௌலானா, உயிர்த்த ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் கிழக்கில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தியதேடு, சந்திப்பின் போது தானும் உடனிருந்ததாகவும் மேலும் கூறினார்.
காணொளி வெளியான உடனேயே, 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்து அப்போதைய கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்த வெளிப்பாடு குறித்து கருத்து தெரிவித்த பிள்ளையான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது குண்டுதாரிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என மறுத்தார், அத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் கூறினார்.
அசாத் மௌலானா உத்தியோகபூர்வமாக அறிவித்து, தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக கடந்த வருடம் தனது குடும்பத்தினருடன் இலங்கையை விட்டு வெளியேறியதாக பிள்ளையான் அப்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
‘செனல் 4’ காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, அசாத் மௌலானாவின் கூற்றுக்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த சர்வதேச உதவியை பிள்ளையான் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
