தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டமும் உண்மையும்

இதுவொரு Factcrescendo கதை

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ (Factcrescendo) நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

காங்கசந்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போர்வீரர்களைக் கொலைகாரர்கள் எனக் குற்றம் சுமத்தி சிங்கள-தமிழ் தேசிய ஒற்றுமையை உடைக்கும் இந்த இனவாதிகளுக் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படட்டும்! அரசு, எதிர்க்கட்சி, பொதுமக்களின் கவனத்திற்கு, என தெரிவித்து 2024.11.17 ஆம் திகதி குறித்த பதிவு பகிரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் உண்மைத் தண்மையை ஆராயும் நோக்கில் இது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

அதன் போது 2024.11.15 ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ரஜமஹா விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை என தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும் தையிட்டியில் மேற்கூறப்பட்டவாறு போராட்டம் நடைபெற்றதா என்பதனை நாம் உறுதி செய்வதற்காக காங்கேசன்துறை பொலிஸாரை தொடர்புகொண்டு கேட்ட போது கடந்த 15 ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ரஜமஹா விகாரை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றதாக அவர்கள் உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த சமூக ஊடக பதிவுகளின் பிரகாரம் இந்த போராட்டமானது தேர்தல் முடிவுகளின் பின்னணி தாக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்பது குறித்து நாம் தேடுதலில் ஈடுப்பட்டிருந்தோம்.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், கடந்த ஒருவருட காலமாக மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் இந்த போராட்டமானது, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதனையும் எம்மால் அறிய முடிந்தது.

மேலும் குறித்த விகாரைக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

மேலும் இந்த போராட்டத்தின் பின்னணி குறித்து தேடுதலில் ஈடுபட்ட போது குறித்த விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் இருவருடன் தொடர்புகொண்டு கேட்ட போது, குறித்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ப்படும் இந்த போராட்டமானது, அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் ஒன்று அல்ல எனவும் இது கடந்த ஒரு வருட காலமாக ஒவ்வொரு பெளர்ணமி தினத்தின் போது இடம்றெ்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இதன்போது குறித்த போராட்டத்தை அமைதியான முறையில் விகாரை நடவடிக்கைகளுக்கு இடையூறு இன்றி மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் இந்த போராட்டம் குறித்து நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிடம் கேட்டபோது, இது தேர்தல் முடிவுகளின் பின்னரான போராட்டம் அல்ல எனவும், இந்த போராட்டமானது கடந்த ஒரு வருடகாலமாக ஒவ்வொரு பெளர்ணமி தினத்தின் போது மக்களின் உரிமைக்காக நடத்தப்படும் போராட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானிக்கும் போது தையிட்டியில் உள்ள விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த போராட்டமானது, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அல்லவெனவும் இது கடந்த ஒரு வருடகாலமாக ஒவ்வொரு பெளர்ணமி தினத்தின் போதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டம் என்பதனை தெளிவாக அறிந்கொள்ள முடிந்தது.

Latest articles

Similar articles