பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்ய இலங்கைக்கு அழைப்பு

கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தற்போது இலங்கைப் நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப்பேச்சாளர் ரவினா சம்தசனி (Ravina Shamdasani) அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச சட்டத்தில் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம், தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்குட்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் இடங்களை பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இருக்கின்ற வாய்ப்புகளை வரையறுக்கும் விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக வரையறுக்கப்பட்ட அல்லது பாதுகாப்புகள் இல்லாமல், உரிமைகளை கட்டுப்படுத்த நிர்வாகத்திற்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குமென அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டமூலத்தை கணிசமான வகையில் திருத்துவதற்கும், இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு முழுமையாக இணங்குவதற்கும் சிவில் சமூகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு ஏற்றாற்போன்று, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை திருத்தியமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப்பேச்சாளர் ரவினா சம்தசனி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles