தைப்பொங்கல் சர்ச்சை: அமைச்சர் ஜீவன் விரிவான விளக்கம்

தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் கடந்த 21 கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்றமை மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மலையகத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் எக்ஸ் தளத்தில்  விளக்கமளித்துள்ளார்.

எக்ஸ் தளப் பதிவின் தமிழ் மொழிபெயர்ப்பு;

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் தேசிய தைப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வின் மொத்தச் செலவு ரூபாய் 5 மில்லியன்.

நிகழ்ச்சிக்கான அரசின் பங்களிப்பு ரூபாய் 500,000

ஏனைய அனைத்து செலவுகளும் உள்ளூர் அனுசரணை மூலம் நிதியளிக்கப்பட்டன.

விழாவிற்கு பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPC) பங்களிக்கவில்லை.

தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களின் வருகை தனிப்பட்ட நிதிப்பங்களிப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

இணையத்தில் நடிகைகளை இழிவுபடுத்தும், பெண் வெறுப்பு கொண்ட சில குறிப்புகள் வெட்கக்கேடானது. அவர்கள் ஆணாக இருந்திருந்தால் கதை முற்றிலும் மாறுபட்டிருக்கும் என எனக்குத் தெரியும்.

நிகழ்வைத் தொடர்ந்து 100 இளைஞர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்களுடன் இணைந்து மலையக இளைஞர்களின் படைப்புத் திறன்களை வளர்ப்பது தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.

கலை மற்றும் கலாச்சாரத்தை கற்கும் 300 மாணவர்கள் நமது துடிப்பான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தைப் பொங்கல் ஒரு தமிழ் இந்து சமய மற்றும் கலாச்சார விழா. இலங்கைத் தமிழர்களும் அவர்களின் சமய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் கொண்டாடப்படுவதற்கு தகுதியானவர்கள்.

தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆனால் அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் வரை அவர்களின் கலாச்சாரத்தின் அங்கீகாரமும் கொண்டாட்டமும் மறுக்கப்படுவதாக இது அர்த்தப்படுத்தக்கூடாது.

கலாச்சார அங்கீகாரம் மற்றும் கொண்டாட்டமும் கூட உயர்வுதான்.

பெருந்தோட்டத்துறைக்கான அபிவிருத்தி

நாங்கள் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தைத் ஆரம்பித்தோம்.

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் இவ்வருடம் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தோட்டங்களில் உள்ள 176,000 குடும்பங்களுக்கு 10 பேர்ச் காணிகளை வழங்குவதற்கு இந்த வருடம் 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் துறையில் உள்ள சிறுவர்களுக்கான விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கல்விக்கான அணுகலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 65 ஸ்மார்ட் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்படும்.

தோட்டத் துறையில் உள்ள சகல சிறுவர்னளையும் உள்ளடக்கி சிறுவர்கள் தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய பாடசாலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

ஒரே இரவில் நிலைமைகள் மாறப்போவதில்லை. ஆனால் நாம் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இப்போது போடுகிறோம்.

தமிழ் கலாச்சாரத்தின் அரை நாள் கொண்டாட்டத்துடன் தொடர்புடைய செலவுகளுக்கான வெளிப்படைத்தன்மைக்கான கோரிக்கைகளை நான் வரவேற்கிறேன். இலங்கையில் அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் எதிர்கால அரச கொண்டாட்டங்களுக்கு இந்த அளவிலான பொது ஆய்வு தொடரும் என நம்புகிறேன்.

Latest articles

Similar articles