உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரும், மூத்த சட்டத்தரணியும் ஹொங்கொங்கைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பசில் பெர்னாண்டோ தனது வாழ்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் சட்டத் தொழில்துறையில் அவர் மேற்கொண்ட தலையீடுகள் காரணமாகவே 1980களின் இறுதிப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் பின்னர், தனது மனிதநேயச் செயற்பாடுகளை மேலும் தீவிரமாகவும் பரந்த துறைகளிலும் விரிவுபடுத்திய அவர், இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றினார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்தவொரு வகையான எல்லைகளோ அல்லது கருத்தியல் வேறுபாடுகளோ செல்லுபடியாகாது என்பதை அவர் தனது செயற்பாடுகள் மூலம் எடுத்துக்காட்டினார்.
எனக்குத் தெரிந்தவரையில், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பதவியேற்ற பின்னரே மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் தீவிரமாகவும் இடைவிடாத போராட்டத்திலும் ஈடுபட்டார். அதற்கு முன்னரும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து சர்வதேச குற்றவியல் துறையில் அரசுத் தரப்பு சட்டத்தரணியா பணியாற்றியிருந்தாலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேலும் விரிவான முறையிலும் புதிய அணுகுமுறைகள் மற்றும் கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் அவர் செயற்பட்டது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கிய காலத்திலேயே ஆகும்.
நிபந்தனையற்ற சட்டப் போராளி
சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ ஒரு நிபந்தனையற்ற சட்டப் போராளியாவார். மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதே என நம்பிய அவர், தனது அறிவு, நேரம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை ஆசியப் பிராந்தியத்தின் பல நாடுகளில் வாழும் குரலற்ற மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்தார். எந்தவொரு தனிப்பட்ட நன்மையையோ அல்லது குறைந்தபட்சம் பாராட்டையோ எதிர்பார்க்காமல், இரவு பகலாக இதற்காக உழைத்தார்.
இந்தியா, மியன்மார், தாய்லாந்து, இலங்கை, பங்களாதேசம், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் அரச அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, மனித உரிமைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், தனிநபர் உரிமைகள் ஆகியவற்றை இழந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவரது தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் எண்ணிலடங்காதவை. அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட விசாரணைகள், வழங்கிய சட்ட ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு அதிகமானதாகும்.
எனக்குத் தெரிந்தவரையில், மற்றவர்களால் செய்ய முடியாத அல்லது செய்ய எவரும் முயற்சிக்காத பல விடயங்களை எவ்விதத் தயக்கமுமின்றி நடைமுறைப்படுத்த முயன்றவர் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ ஆவார். சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளின் பலன்களை இன்றும் பலர் அனுபவித்து வருகின்றனர் என்று கூறுவது மிகைப்படுத்தலாகாது.
சட்டத்தரணி பசில் பெர்னாண்டோவின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்த, அவருக்கே உரித்தான பல பண்புகளில் மிக முக்கியமானது, எந்தவொரு சம்பவத்தையும் புதிய கோணத்தில் பார்ப்பதற்கும், சிந்திப்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மற்றவர்கள் பயன்படுத்தாத வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் அவர் கொண்டிருந்த தனித்துவமான திறமையாகும். சட்டப் பணிகளில் அது சவாலானதும் ஆபத்தானதுமான செயலாக இருந்தபோதிலும், அந்தச் சவால்களையும் ஆபத்துகளையும் ஏற்றுக்கொள்ள அவர் எப்போதும் தயாராக இருந்தார்.
அதேபோன்று, மனித உரிமைகள் துறையில் பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலிருந்து சட்டப் போராட்டங்கள் நடைபெறும் நீதிமன்றச் செயற்பாடுகள் வரை பல்வேறு வழிகளில் அவர் தனது பணிகளை முன்னெடுத்தார்.
எளிமையான மனிதரின் சிறந்த சட்ட அறிவு
சட்ட அறிவைக் கொண்ட இரண்டாம் நிலைத் தலைமுறையினரை உருவாக்குவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியது. இன்று பலரால் கவனிக்கப்படாத விடயமாக இது மாறியிருந்தாலும், 2000 களின் ஆரம்பப் பகுதியிலும் அதன் பின்னரும் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோவின் வழிகாட்டுதல்களாலும் ஆலோசனைகளாலும் தமது அறிவை விரிவுபடுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை நான் நன்கு அறிவேன்.
இன்று ஊடகச் சந்திப்புகளை நடத்தி சட்டம் தொடர்பாக உரையாற்றும் பல சட்டத்தரணிகளின் உண்மையான ஆரம்பகால ஆசான் வேறு யாருமல்ல; சட்டத்தரணி பசில் பெர்னாண்டோவே ஆவார். அந்தச் சட்டத்தரணிகளின் பெயர்களை நான் குறிப்பிடாவிட்டாலும், பசில் பெர்னாண்டோ அமைதியாக ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் அவர் மேற்கொண்ட பணிகளைச் சுருக்கமாகவேனும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
சித்திரவதை, சிறுவர் பாலியல் வன்முறை போன்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான சட்டத் தலையீடுகளின்போது, அவற்றுக்கெனத் தயாரிக்கப்படும் சட்ட ஆவணங்களில் தனிச்சிறப்புடைய விடயங்கள் இடம்பெற வேண்டும். இதனைச் செய்வதற்கு சட்ட அறிவுடன் மட்டுமன்றி, இத்தகைய விடயங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் எவ்வாறான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் தொழில்முறை அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்கூறியவாறு, சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ பாரம்பரிய சட்ட மற்றும் நீதிமன்றப் பணிகளுக்கு அப்பால் சிந்தித்துச் செயற்பட்டவர். அதனாலேயே அவர் தெரிவுசெய்த வழிமுறைகள் மாற்று அணுகுமுறைகளாலும் பரிசோதனை முயற்சிகளாலும் நிறைந்திருந்தன. சில இளம் சட்டத்தரணிகள் இத்தகைய முயற்சிகளுக்கு அஞ்சியதுடன், அவை தமது தொழில்முறை எதிர்காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் இரகசியமாகக் கிசுகிசுத்தனர்.
ஆனால், மூத்த சட்டத்தரணியும் சர்வதேச அளவில் புதிய சட்டத் துறைகள் தொடர்பாக ஆழ்ந்த அறிவைக் கொண்டவருமான பசில் பெர்னாண்டோவுக்கு சவால் விடுக்கவோ, அவரது கருத்துகளைத் தாண்டிச் செல்லவோ அவர்களில் எவராலும் முடியவில்லை. உண்மையில், அவரது பெறுமதியான ஆலோசனைகள், சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் உத்திகள் மற்றும் விடயங்களைத் தொகுத்து முன்வைக்கும் இயல்பான திறமை ஆகியவற்றின் மூலம் பல சட்டத்தரணிகள் பின்னர் பெரும் பயன்களைப் பெற்றனர் என்பது உண்மையாகும்.
சில வழக்குகளில், சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தனது இளம் சட்டத்தரணிகளுக்கு மணித்தியாலக் கணக்கில் மட்டுமன்றி, அரைநாள் முழுவதும் உழைத்து ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தயாரிக்க வேண்டிய சத்தியப்பிரமாணங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய அறிக்கைகள் மற்றும் சட்ட ஆவணங்கள், அதேபோன்று அடிப்படை உரிமை வழக்குகளுக்காகத் தயாரிக்க வேண்டிய மனுக்கள் மற்றும் சத்தியப்பிரமாணங்கள் ஆகியவற்றைச் சரியாகத் தயாரிப்பதற்கு அவர் எவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தார் என்பதை நான் ஒன்றிரண்டு தடவைகள் மட்டுமல்ல, பலமுறை நேரில் கண்டிருக்கிறேன்.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஹொங்கொங்கிலிருந்து தொலைபேசி மூலம் இலங்கையிலிருந்த சட்டத்தரணிகளுடன் தொடர்புகொண்டு, அந்த ஆவணங்களை எழுத்துக்கு எழுத்து எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையும், அவற்றுக்கு எத்தகைய சட்ட வாதங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் அவர் மிகுந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் விளக்கியதை நான் அறிவேன். ஏனெனில், அத்தகைய பல சந்தர்ப்பங்களில், அப்போது இளம் வயதிலிருந்த என்னைப் போன்ற செயற்பாட்டாளர்களையும் அந்தப் பணிகளில் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர் பணிவும் கருணையும் கொண்டவராக இருந்தார்.
இத்தகைய சிறப்பு வழக்குகளை நீதிமன்றத்தில் முன்னெடுத்த சில சட்டத்தரணிகள் தமது விருப்பத்திற்கேற்ப தயாரித்த பல ஆவணங்களைச் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ ஒதுக்கிவிட்டு, அனைத்தையும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து சரியாக ஆவணப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் ஒரு சட்டத்தரணிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் அல்லது அவரது தொழில்முறை கௌரவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தோன்றலாம். வெளிப்பார்வையில், பசில் பெர்னாண்டோ தனது அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாகவும் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர் நடந்துகொண்ட கருணையான மற்றும் தொழில்முறை முதிர்ச்சியுடைய விதத்தைப் பார்க்கும்போது, உண்மையில் அது அவ்வாறல்ல என்பதை எமது அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டோம்.
தனது இளம் சட்டத்தரணியைத் தொழில்முறையில் சங்கடப்படுத்துவதோ அல்லது அவருக்கு எதுவும் தெரியாது என்று சித்தரிப்பதோ பசில் பெர்னாண்டோவின் நோக்கமாக இருக்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்ட அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகச் சிறந்ததும் மிகச் சரியானதுமான நடவடிக்கையை மேற்கொள்வதே அவரது நோக்கமாக இருந்தது.
எதிர்த்தரப்பினரால் சட்டரீதியாகச் சவால் செய்ய முடியாத உயர்தரமான ஆவணங்களைத் தயாரிப்பதும், வலுவான வாதங்களைக் கட்டியெழுப்புவதும், சாட்சியங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதும் அவரது நோக்கங்களாக இருந்தன. மேலும், பசில் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இத்தகைய ஆவணங்களைத் தயாரித்ததன் மூலம் ஏனைய சட்டத்தரணிகளும் தமது அறிவையும் தொழில்முறை அனுபவத்தையும் மேம்படுத்திக்கொண்டனர் என்பதை நான் நன்கு அறிவேன்.
சர்வதேச அனுபவங்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவந்தவர்
சர்வதேச அளவில் குற்றவியல் துறையில் அரசுத் தரப்பு சட்டத்தரணியாக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தனது அனுபவங்களையும் துறைசார் அறிவையும் இலங்கையிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் இத்தகைய வழக்குகளுக்காகத் தாராளமாகப் பகிர்ந்துகொண்டார் என்பது அவருடன் நெருக்கமாகப் பழகிய எம்மில் பலர் அறிந்த விடயமாகும்.
குறிப்பாக, 2000களில் இலங்கையில் தொற்றுநோய்போல் பரவிய பொலிஸ் சித்திரவதைகள், காவலில் இடம்பெற்ற மரணங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் அவர் பல சிறப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தினார். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதும், சட்டரீதியான, வைத்திய ரீதியான மற்றும் ஏனைய சூழ்நிலைச் சான்றுகளை உருவாக்குவதற்கான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை விரைவாகத் தொகுப்பதும் அவற்றில் முக்கியமானவையாக இருந்தன.
இவை அனைத்திலும் மிகவும் முக்கியமானதும் புரட்சிகரமானதுமான விடயம், அதுவரை நிலவிய சட்டக் கருத்தாக்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் குற்றவியல் வழக்குகளில் சிவில் தரப்பினரும் தலையீடு செய்ய முடியும் என்ற கருத்தை முன்வைத்து அவர் நடத்திய சிந்தனைப் போராட்டமாகும்.
அந்தக் காலத்தில் இது எம்மில் பலரை வியப்பில் ஆழ்த்தியிருந்தாலும், அவர் வழக்கமான புன்னகையுடனும் தகர்க்க முடியாத தர்க்கங்களுடனும் தனது நோக்கத்தைப் படிப்படியாக விளக்கினார். எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துச் செயற்பட்ட அவர், சித்திரவதை போன்ற மிகக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பது அரசுத் தரப்பு சட்டத்தரணி அல்லது சட்டமா அதிபரின் கடமை என்று கருதி ஒதுங்கியிருந்து பார்க்க வேண்டியதில்லை என்பதை வாதத்துடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டினார்.
அத்தகைய குற்றங்களைத் தடுப்பதில் சிவில் சமூகத்தினருக்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் பொறுப்பும் பிறரால் பறிக்க முடியாத உரிமையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை நீதிமன்ற வளாகங்களிலும் நிரூபித்துக் காட்டினார்.
தனிமைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றவர்
அரச அதிகாரத்தைக் கொண்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் சித்திரவதைக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்ட பலர், அதற்கு எதிராகக் குரல் எழுப்புவதில்லை. அதற்குக் காரணம் சட்டம் மற்றும் தமக்குரிய உரிமைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை மட்டுமல்ல; அத்தகைய சூழ்நிலைகளில் தலையிடும் வெளித்தரப்பினரின் செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளும் நம்பிக்கையின் எல்லைகளும்கூட காரணங்களாக உள்ளன என்று சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ அடிக்கடி கூறிவந்தார்.
எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீதி கிடைக்கும் வரை தம்மைப் பாதுகாத்து, அதற்காகத் தமக்கு ஊக்கமளிக்க ஒரு குழுவினர் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் சட்டக் கட்டமைப்பிலும் அரசுத் தரப்பு சட்டத்தரணி பணிகளிலும் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அலட்சியம் காரணமாகக் கைவிடப்படும் வழக்குகள் தொடர்பாகக் கடுமையான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடாமல் அவரைப் பாதுகாப்பதும், அவருக்கு நம்பிக்கையூட்டி, அதற்காகச் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதும் மனித உரிமைப் பாதுகாவலர்களின் முதன்மையான பொறுப்பாகும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். இதற்காக நீதிமன்றச் செயற்பாடுகள் மற்றும் வழக்குத் தொடரல் தொடர்பாகத் தனக்கிருந்த ஆழ்ந்த அறிவைப் பயன்படுத்தினார்.
அந்தக் காலத்தில் பொலிஸ் சித்திரவதைக்கு உள்ளாகி நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெற முடியாமல் இருந்த பலருக்கு, சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தலைமையிலான ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதன் கீழ் இலங்கையில் செயற்பட்ட சில அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புகளும் பாதுகாப்பு வழங்கின. இதனைத் தனிநபர் தொடர்பான பிரச்சினையாக மட்டும் கருதாமல், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிறுவனக் கட்டமைப்பில் நிலவிய ஆழமான நெருக்கடியாகவே அவை கருதின.
அண்மைய நாட்களில் பேசப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான சம்பவத் தொடரில் முன்வைக்கப்பட்ட பல விடயங்களைச் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ பல தசாப்தங்களுக்கு முன்னரே முன்வைத்திருந்தார்.
குறிப்பாக, இன்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பேசப்படும் சட்டமா அதிபரின் பங்கு தொடர்பான விவாதத்தை இலங்கையில் ஆரம்பித்த ஒரு சிலரில் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ முன்னணியில் இருந்தார்.
சட்டமா அதிபரின் பங்கு இரட்டைத் தன்மையுடனும் பாரபட்சத்துடனும் இருப்பதாக அவர் கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தின் பிரதான சட்ட ஆலோசகராகவும் “அரசாங்கத்தின் சட்டத்தரணியாகவும்” செயற்படும் சட்டமா அதிபர், அரசாங்கத்துக்கு எதிரான குற்றவியல் வழக்குகளிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாவது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதன் காரணமாக, சித்திரவதை போன்ற பாரதூரமான மனித உரிமை மீறல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சட்டமா அதிபர், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்காக முன்னிலையாவதற்கும் அத்தகைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கும் முனைவதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார்.
எனவே, இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சட்டத்தரணிகளுக்கும் பொதுச் சமூகத்தினருக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு இருப்பதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். இது ஒரு வழக்கு அல்லது முறைப்பாடு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; ஆழமாக வேரூன்றிய நிறுவனமயமான நெருக்கடி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அனைத்து விடயங்களின் அடிப்படையில், அந்தக் காலத்தில் அவரது தலையீட்டுடன் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காகச் சட்டத்துடன் போராடப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகவும் சிக்கலானவையாகவும் இருந்தன.
சில சம்பவங்களில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதன் கீழ் செயற்பட்ட இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புகளும் அவரது தலையீட்டுடன் செயற்பட்டன. வேறு சில சம்பவங்களை சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் நேரடியாக முன்னெடுத்தன. ஆனால், எந்த அமைப்பு சட்டரீதியான தலையீட்டை மேற்கொண்டாலும், ஆலோசனை வழங்குதல், கண்காணித்தல், தொடர்ச்சியாகப் பின்தொடர்தல் மற்றும் வழிநடத்துதல் ஆகியவற்றைச் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ மேற்கொண்டதே மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சில வழக்குகளில் அவர் ஒவ்வொரு கட்டமாகவும் விடயங்களை ஆராய்ந்து, புதிய சட்டக் கோட்பாடுகளையும் வாதங்களையும் உருவாக்கி, அவை தொடர்பாக இலங்கைச் சட்டத்தரணிகளுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விசாரணை அதிகாரிகளுக்கும் அறிவூட்டுவதற்காக இரவு பகலாக உழைத்தார்.
இந்தத் தடைகளைக் கடந்து நீதியைத் தேடிய பயணத்தில் உண்மையான மாலுமிகள் பலர் இருந்தபோதிலும், அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டிய கப்பலின் தலைவராக இருந்தவர் வேறு யாருமல்ல, சட்டத்தரணி பசில் பெர்னாண்டோவே ஆவார். இதனை நான் மட்டுமல்ல, அவருடன் பழகிய பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
சித்திரவதையாளர்களுக்கு எதிரான போராட்டம்
அந்தக் காலத்தில் அவரது தலையீட்டின் மூலம் நீதிமன்றச் செயற்பாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பல வழக்குகள் தனித்துவமானவையாக இருந்தன. அவற்றில் சில, அவற்றைத் தீர்ப்பதற்காக எந்தவொரு அரச அல்லது அரச சார்பற்ற அமைப்பும் முன்வரும் என்று குறைந்தபட்ச நம்பிக்கைகூட வைக்க முடியாத அளவுக்குக் கொடூரமான பொலிஸ் அடக்குமுறைச் சம்பவங்களாக இருந்தன.
அந்தக் காலத்தில் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தலையீடு செய்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று, 2002ஆம் ஆண்டு வத்தளை பொலிஸ் அதிகாரிகளால் பொய்யான தகவல்களின் அடிப்படையில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெரார்ட் பெரேராவின் வழக்காகும்.
வத்தளை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அவரை அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுடன், திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதாகக் கூறி அவரைக் கடுமையான உடல் சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அந்தத் தாக்குதல்களால் அவரது உட்புற உறுப்புகள், குறிப்பாக சிறுநீரகங்கள் செயலிழந்தன. அவர் மயக்கமடைந்து, மரணத்தின் விளிம்புக்குச் சென்றார்.
அதன் பின்னர், சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தலைமையிலான ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கையில் உள்ள தனது பங்காளி அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இத்தகைய குற்றம் தொடர்பாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரச நிறுவனக் கட்டமைப்பே பொறுப்பைத் தட்டிக்கழித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது ஏற்கெனவே பாரதூரமாக நோய்வாய்ப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்து அவரது உயிரைப் பாதுகாப்பதிலேயே சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ முதலில் கவனம் செலுத்தினார். அதன்படி, ஜெரார்ட் பெரேரா கொழும்பிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பல மாற்று ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
பின்னர், அந்தச் சித்திரவதை வழக்கை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்று, தீர்ப்பின் மூலம் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் குற்றவாளிகளாக அறிவிக்க முடிந்தது. எனினும், சில ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தச் சித்திரவதைக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், வத்தளை பொலிஸின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஜெரார்ட் பெரேரா பேருந்தொன்றுக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.
கந்தானை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் அப்போது 19 வயதுடைய இளைஞரான லலித் ராஜபக்ச கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டமும் இதற்கு இணையானதாகும்.
2002ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி இரவு தனது நண்பரின் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட அந்த இளைஞர், திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகக் கூறி கந்தானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், பொலிஸ் நிலையத்துக்குள் உப பொலிஸ் பரிசோதகர் அசங்க பீரிஸ் தலைமையிலான குழுவினர் லலித் ராஜபக்சவை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிச் சித்திரவதை செய்தனர். அந்தத் தாக்குதல்களால் கைது செய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள்ளேயே அவர் பொலிஸ் நிலையத்துக்குள் மயக்கமடைந்தார்.
இந்தச் சம்பவத்தை அறிந்த சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் அந்த இளைஞரை வட கொழும்பு போதனா மருத்துவமனையான ராகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். பல வாரங்கள் கோமா நிலையில் இருந்த பின்னர் அவர் ஓரளவு குணமடைந்தாலும், நீண்டகாலம் வரை அவரால் முறையாக நடக்கவோ, சாதாரண நபரைப் போன்று தெளிவாகப் பேசவோ முடியவில்லை. பொலிஸ் சித்திரவதையின் தீவிரத்தை இது வெளிப்படுத்தியது.
அந்தக் காலத்தில் அந்த இளைஞரின் நிலையைப் பார்த்த பலரின் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது. அவர் கால்களை எடுத்து வைத்து நடக்கும் விதமும், தடுமாறிப் பேசுவதற்காக அவர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியும் மனதை உருக்கும் வகையில் இருந்தன. தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் மன உளைச்சல் காரணமாக, பல ஆண்டுகள் கடந்தும் அவரால் முறையாக நடக்கவோ, முன்னர் இருந்த நிலையைப் போன்று பேசவோ முடியவில்லை.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பின் மூலம் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
ஜெரார்ட் பெரேராவின் சித்திரவதை வழக்கைப் போலவே, லலித் ராஜபக்சவின் சித்திரவதை வழக்கும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நீண்டகால கடினமான போராட்டத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தச் சித்திரவதை வழக்கிலும் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோவின் பங்களிப்பு தனித்துவமானதாக இருந்தது. பாதிக்கப்பட்ட இளைஞரின் உயிரைப் பாதுகாப்பது, நீதிமன்றச் செயற்பாட்டுக்குத் தேவையான சட்டத் தலையீடுகளை மேற்கொள்வது, நீண்டகாலமாக அவருக்குத் தொடர்ச்சியான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பது ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும்.
அதேபோன்று, அவரைப் பராமரிப்பதற்காகக் குழுக்களை நியமித்து, பின்னர் படிப்படியாக அவரைச் சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கான சூழலை ஏற்படுத்திய நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன என்பதை நான் நன்கு அறிவேன்.
முடிவுறாத போராட்டம்
கொடூரமான பொலிஸ் சித்திரவதைகளுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்காகச் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ இரவு பகலாக ஆற்றிய பணிகள் சிறியவை அல்ல. அவற்றைச் சம்பவங்களாகப் பட்டியலிட முயன்றால், மிக நீண்ட ஆவணமாக அது அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு சம்பவங்களைப் போலவே முக்கியத்துவமும் தனித்துவமும் வாய்ந்த மற்றொரு சம்பவத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
2003 அல்லது 2004ஆம் ஆண்டில், கண்டி அங்கும்புர பொலிஸார் வீட்டில் தங்கியிருந்த சிறுவயதுடைய ஆண் பிள்ளையொருவரைப் பலவந்தமாக அழைத்துச் சென்று, அருகிலிருந்த வீட்டில் இடம்பெற்ற சிறிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். அந்த விசாரணையின்போது பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை மிகக் கடுமையாகத் தாக்கினர். இதன் விளைவாக அவனது ஒரு கை முறிந்ததுடன், உடலின் ஏனைய பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டன. பின்னர், கண்டி பிரதேசத்தின் புகழ்பெற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரான அருட்தந்தை நந்தன மனதுங்க, அந்தச் சிறுவன் தொடர்பாகத் தலையிட்டு, பொலிஸ் தாக்குதலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
இந்தச் சம்பவத்தில் தனித்துவமான தலையீட்டை மேற்கொண்ட சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ, அந்தத் தாக்குதலைச் சாதாரணமான ஒன்றாகக் கருதாமல், சிறுவயதுடைய பிள்ளையொருவருக்கு எதிராகப் பொலிஸார் மேற்கொண்ட சித்திரவதையாக வரையறுத்தார். அதனைச் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தின் கீழ் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதன்படி, மிக விரைவாகவும் அவசரமான விடயமாகவும் கருதி, அதற்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவச் சான்றுகளைச் சேகரிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்குப் பாதுகாப்பான பராமரிப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் சட்டத்தரணிகளுக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் தொடர்ந்து ஆலோசனை வழங்கினார்.
இந்தச் சித்திரவதைச் சம்பவத்தில் பல விசேட விடயங்கள் இடம்பெற்றன. அவற்றில் முக்கியமானது, பொலிஸ் தாக்குதல் தொடர்பாக அந்தச் சிறுவனின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மத்திய மாகாண அலுவலகத்தில் அளித்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு அப்போது பணியாற்றிய ஒருங்கிணைப்பு அதிகாரி பாரபட்சமாகவும் தன்னிச்சையாகவும் நடந்துகொண்டமையாகும்.
பொலிஸ் தாக்குதலின் காரணமாகவே சிறுவனின் கை முறிந்தது என்பதற்குத் தெளிவான நீதிமருத்துவச் சான்றுகள் இருந்தபோதிலும், அந்த அதிகாரி தயாரித்த விசாரணை அறிக்கையில், கை முறிந்ததற்குப் பொலிஸ் தாக்குதல் காரணமல்ல என்றும், பேருந்திலிருந்து விழுந்ததாலேயே அது ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ பொலிஸ் சித்திரவதையையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டையும் கடுமையாக விமர்சித்து, அந்தச் சிறுவனை ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வொன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததால், அந்தச் சம்பவம் அக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஒருங்கிணைப்பு அதிகாரி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொலிஸாருக்குச் சார்பாகச் செயற்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்று, அந்த ஒருங்கிணைப்பு அதிகாரி ஆணைக்குழுவின் உதவியை நாடி வந்த பெண்களுக்குத் தனது அலுவலகத்திலேயே பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகக் கிடைத்த முறைப்பாடுகளை அக்காலத்தில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூடி மறைக்க முயன்றதையும் அவர் கண்டித்தார்.
இது தொடர்பான நேரடிச் சாட்சியங்களையும் அவர் சேகரித்து, அவற்றை முறையாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, முழுமையான விசாரணை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்தினார் என்பதை நான் நன்கு அறிவேன். எனினும், ஆணைக்குழுவின் அதிகாரிகளின் செல்வாக்கும் இரகசியங்களை மறைக்க வேண்டிய தேவையும் காரணமாக, அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு, அந்த ஊழல் அதிகாரி தொடர்ந்து சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டார்.
உயர்குடியினருக்கான சட்டக் கருத்தாக்கத்துக்குச் சவால் விடுத்தவர்
இலங்கையில் அப்போது நடைமுறையில் இருந்த 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகள் அல்லது தண்டனைகளுக்கு எதிரான சட்டத்தை நடைமுறையில் பயன்படுத்திய முன்னணி நபர்களில் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோவும் ஒருவர் என்று கூறுவது பொய்யல்ல. ஜெரார்ட் பெரேரா மற்றும் லலித் ராஜபக்ச போன்ற பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் உட்படப் பல வழக்குகளுக்கு அந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளே அடிப்படையாக அமைந்தன.
அவசர அழைப்புகளின் முன்னோடி
சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ சட்டத்தைப் புதிய கோணத்தில் அணுகிச் செயற்பட்டவர் என்று இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். அவர் பாரம்பரியக் கருத்தாக்கங்கள் அல்லது சட்டங்களுக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளவில்லை. சட்டத்துக்குள்ளேயே மறைந்திருந்த சில ஏற்பாடுகளை வெளிக்கொண்டு வந்து, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் புதிய அணுகுமுறையை உருவாக்கினார்.
Urgent Appeals-இன் முன்னோடி
ஒரு குற்றம் தொடர்பாக அல்லது பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நீண்டகாலம் செலவிடாமல், தேசிய அல்லது சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களை விரைவாகத் தொடர்புகொண்டு, அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்பட்டது. பல சம்பவங்களில் இது பெரும் பயன்களை அளித்தது.
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் மனித உரிமை மீறல், சித்திரவதை, சட்டவிரோதக் கைது அல்லது தடுப்புக்காவல், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட எந்தவொரு மனித உரிமை மீறல் தொடர்பான தகவல் கிடைத்தாலும், முதலில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை மேற்கூறிய முறையில் ஓர் அவசர அழைப்புச் செய்தியை வெளியிடுவதாகும். அதில் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பான அடிப்படைத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். சில சம்பவங்களில் தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து, விரிவான விபரங்களுடன் அவசர அழைப்புகளை வெளியிட்ட சந்தர்ப்பங்களும் அதிகமாக இருந்தன.
அதேபோன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பணியில் பிரபலமான பொதுக் கருத்துகளின் அடிப்படையில் மட்டும் செயற்பட முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தம்மிடம் வரும்வரை காத்திருக்காமல் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அவர்களைத் தேடிச் சென்று சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி, அவர்களின் துயரங்களைக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அதற்கும் மேலாக நீதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதற்காக அவர் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டார். இது அவரது சமகாலத்தவர்கள் பலரிடம் காணப்படாத நற்பண்புகளை வெளிப்படுத்தியது.
குடிமக்கள் வலிமை கொண்ட போராளிகளின் குழு
பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கும் குற்றங்களுக்கும் உள்ளாகும் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தாமல், அவர்களைச் சுற்றி வலுவான மனிதப் பாதுகாப்பு அரணை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அந்த உயரிய கருத்தாக்கத்தையும் இலங்கையில் இத்தகைய குற்றங்கள் தொடர்பாகச் செயற்பட்ட அமைப்புகளுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. குறிப்பாக, சமூகத்தில் குரலற்றவர்களாகவும், உயர்குடியினர் எனக் கருதப்படும் போலியான சமூகப் பிரிவுக்குள் அடங்காதவர்களாகவும் இருந்த பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வலிமையையும் தன்னம்பிக்கையையும் வழங்குவதற்காக அவர் அக்காலத்தில் தனித்துவமான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தினார்.
அத்தகைய பாதிக்கப்பட்டவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, அவருடன் ஒரு குழுவினர் நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதே அந்த வழிமுறையாகும். சில வழக்குகளில் அந்தக் குழுவில் கத்தோலிக்க அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள், பௌத்த பிக்குகள் மற்றும் மனித உரிமை, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இடம்பெற்றனர்.
சிவில் அதிகாரம் அல்லது அரச அதிகாரம் கொண்ட குற்றவாளிகளுக்கு எதிராக இது அடையாள ரீதியாக மிகவும் வலுவான தலையீடாக அமைந்தது. சில நீதிமன்றங்களில் நீதிபதிகளின் விசேட கவனத்தையும் இது ஈர்த்தது. இத்தகைய தனித்துவமான தலையீடு மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் ஒன்று, தலவாக்கலைப் பகுதியில் சிறுமியொருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமாகும். 2000களின் ஆரம்பத்தில் முதன்முதலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் மட்டுமன்றி, அப்பகுதியைச் சேர்ந்த பலரிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்குக் காரணம் இந்தக் கூட்டுத் தலையீட்டு முறையாகும்.
இந்த வழிமுறையின் எளிமையான செயற்பாடு என்னவென்றால், வழக்கு விசாரணை நடைபெறும்போது சிலர் அமைதியான முறையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதாகும். ஆனால், சமூகத்தின் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களிடையே வாழும், செல்வாக்குமிக்க குற்றவாளிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாத பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் கிடைத்த விலைமதிப்பற்ற தைரியமும் வலிமையுமே இதனை மிகவும் வலுவான தலையீடாக மாற்றியது.
மேற்கூறிய சிறுமி பாடசாலைச் சீருடையில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியமளித்தபோது, எதிர்த்தரப்பு சட்டத்தரணியின் கட்டுப்பாடற்ற கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனக்காக நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களையே நம்பிக்கையுடன் பார்த்தார். வழக்கு முடிவடைந்த பின்னர், அந்தச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் அவருக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்தவர்களின் மத்தியில் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இவை மிகவும் உணர்வுபூர்வமான சம்பவங்கள் என்பதில் ஐயமில்லை.
பின்னர், அந்தக் குழுவினர் அவரைச் சுற்றி உருவாக்கிய பாதுகாப்பு அரணின் காரணமாகவே அவர் வலிமையும் தைரியமும் கொண்ட பெண்ணாக வளர்ந்தார். இவை அனைத்தும் இலங்கையில் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ அமைதியாக வழங்கிய கருத்தாக்கங்களாகும்.
உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குடிமக்கள் தலையீடு
அக்காலத்தில் தென்பகுதிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அதன் பின்னர் முறையான நடைமுறைகளுக்கு அமைவாகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவரது வழிகாட்டுதலின் கீழ் வலையமைப்பாகச் செயற்பட்ட மனித உரிமை அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இருந்தனர்.
அப்போது தனித்தனியாகச் சிதறியிருந்த பல அமைப்புகளையும் ஒரே வட்டமேசைக்குக் கொண்டுவர அவர் முயற்சித்தார். கூட்டுச் செயற்பாடுகள் மூலம் ஒவ்வொருவரிடமும் சிதறிக் கிடக்கும் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, அவை தொடர்பாக ஒருங்கிணைந்த அறிவைப் பெறவும், சட்டப் போராட்டங்களுக்கு அதிக வலிமையை வழங்கவும் முடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.
ஒருவரையொருவர் மிஞ்சி முன்னேற வேண்டும் என்ற குறுகிய நோக்கங்கள், சுயநலம் மற்றும் நிதிசார் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இம்முயற்சிகள் அனைத்தும் எப்போதும் வெற்றியளிக்கவில்லை. இருப்பினும், தனித்தனியான சம்பவங்களை கூட்டுப் போராட்டங்களுக்கும் சட்டச் சீர்திருத்தங்களுக்கும் வலிமை சேர்க்கும் வகையில் பயன்படுத்துவதற்கான முயற்சியைச் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ ஒருபோதும் கைவிடவில்லை.
அவரது கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “சித்திரவதைக்கு எதிரான மக்கள் கூட்டணி” (People Against Torture – PTA) அக்காலத்தில் மகத்தான பணிகளை மேற்கொண்டது. ஆனால், பின்னர் பல்வேறு காரணங்களால் அது படிப்படியாகச் சிதைவடைந்தது. கூட்டுச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்துக்குப் பதிலாகத் தனிநபர் கருத்துகள் மேலோங்கத் தொடங்கியதே இதற்குக் காரணமாகும்.
அதேபோன்று, தனிநபர்கள் காணாமல் ஆக்கப்படுவது தொடர்பாகவும் கவனம் செலுத்திய அவர், அதற்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முயற்சித்தார். காணாமல் ஆக்கப்படுதல் என்பது மனிதகுலத்துக்கு எதிரான பாரதூரமான குற்றம் என்று வரையறுத்த அவர், இதற்காகச் செயற்படும் அனைத்துத் தரப்பினரையும் ஊக்குவித்தார்.
நீதிமன்றத்திலிருந்து கல்விசார் பணிகளுக்கு
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் அந்தக் காலத்தில் அவர் மேற்கொண்ட சட்டரீதியான மற்றும் கல்விசார் போராட்டங்களை ஓரிரு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட முடியாது. தனது தொழில்முறை வாழ்க்கை முழுவதிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளிலும் அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது, சமூகத்தினருக்கும் இந்தத் துறையில் ஈடுபட்டவர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் புதிய அறிவை வழங்குவதற்காகவே ஆகும்.
இதற்காகப் பல்வேறு கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் செயற்பாடுகள் நடத்தப்பட்டன. ஏனைய நாடுகளின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெற்ற அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டன. சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ எளிமையானதும் இனிமையானதுமான மொழியில், எவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டத்தை விளக்குவதிலும், எழும் பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வுகளை முன்வைப்பதிலும் மிகுந்த திறமை கொண்டவராக இருந்தார்.
மேலும், அவர் முன்வைத்த பல மாற்றுத் தீர்வுகளும் செயற்பாடுகளும் வெறும் கருத்தாக்கங்களாக மட்டும் இருக்காமல், நடைமுறையில் பயன்படுத்தக்கூடியவையாக இருந்தமை முக்கியமானதாகும். உதாரணமாக, கைது அல்லது தனிநபர் சித்திரவதைச் சம்பவமொன்றின்போது, சில சட்டத்தரணிகள் அல்லது மனித உரிமைப் பாதுகாவலர்கள் நீண்டகாலம் எடுக்கும் சிக்கலான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்தனர். ஆனால், சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ இலகுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்று வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
அப்போது அவர் முதன்மையாகக் கவனம் செலுத்தியது, காவலில் வைக்கப்பட்டிருந்த அல்லது சித்திரவதைக்கு உள்ளாகியிருந்த நபரின் உயிரைப் பாதுகாப்பதிலேயே ஆகும். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், முதலில் பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
மனித உரிமைகள் துறையில் புதிதாக நுழைந்தவர்களாகவும் ஆரம்பகட்டச் செயற்பாட்டாளர்களாகவும் இருந்த என்னைப் போன்ற பலருக்கு, சட்டம், மனித உரிமைச் செயற்பாடுகள் மற்றும் சிவில் போராட்டங்கள் தொடர்பாகப் புதிய கோணத்தில் சிந்திக்கவும் செயற்படவும் அவர் வழிகாட்டினார். தனக்குத் தெரிந்த அனைத்தையும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி தாராளமாகப் பகிர்ந்துகொண்டு, எங்களுக்குப் பல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
அன்றைய காலகட்டத்தில், இன்றைய அளவுக்கு தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதன் பல்வேறு அம்சங்களும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. சமூக ஊடகங்கள் குறித்த விவாதங்கள்கூட இடம்பெறவில்லை. அந்தக் காலத்தில் எங்கள் அனைவராலும் “பசில் அண்ணா” என்று அழைக்கப்பட்ட பசில் பெர்னாண்டோ, பல்வேறு துறைகள் தொடர்பாக எங்களுக்கு அறிவூட்டியதுடன், அந்தத் துறைகளில் மேலும் ஈடுபடுவதற்கும் எங்களை ஊக்குவித்தார். அதேவேளை, ஒருபோதும் புறக்கணிக்க முடியாத தகவல்களின் பெரும் தொகுப்பையும் அவர் முறையாக ஒழுங்குபடுத்தி வழங்கினார்.
குறிப்பிட்ட துறை தொடர்பாக அவர் கொண்டிருந்த அறிவையும் அனுபவத்தையும் என்னைப் போன்ற இளம் செயற்பாட்டாளர்களுக்குப் பகிர்ந்துகொள்வதற்காக, மணித்தியாலக் கணக்கில் மட்டுமன்றி அரைநாள் முழுவதும் நீடித்த நட்புறவான உரையாடல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தினார்.
மனித உரிமைகள் துறையில் புதிய அணுகுமுறைகள், சட்டம் நவீனமயப்படுத்தப்பட வேண்டிய பகுதிகள், சட்டங்கள் மட்டுமன்றி பாரம்பரியமாக வேரூன்றியிருந்த நீதிமன்ற நடைமுறைகளில் சாதகமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய இடங்கள் ஆகியவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கினார். இதற்காக, அந்தத் துறைகளில் அவர் ஏற்கனவே பெற்றிருந்த சர்வதேச அளவிலான அனுபவங்களையும் முதிர்ச்சியையும் பயன்படுத்தினார். இத்தகைய விடயங்கள் தொடர்பாக எங்களிடையே எழுந்த கேள்விகளையும் தெளிவற்ற அம்சங்களையும் மிகுந்த திறமையுடனும் தர்க்கரீதியாகவும் விளக்குவதில் அவர் இயல்பாகவே சிறந்தவராக இருந்தார்.
ஒரு சிறந்த மனிதரின் மறைவு
சட்டத்தரணியாகவும், சர்வதேச அளவில் குற்றவியல் நீதித் துறையில் அரசுத் தரப்பு சட்டத்தரணியாகவும், உண்மையான மனித உரிமைப் போராளியாகவும் விளங்கிய அவர், திறமையான கவிஞராகவும் பல்வேறு துறைகள் தொடர்பான பரந்த அறிவைக் கொண்ட நூலாசிரியராகவும் இருந்தார். சட்டம், சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகத்தில் அன்றாடம் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எளிமையான மொழியிலும் புறக்கணிக்க முடியாத தகவல்களுடனும் பல நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
சாதியவாதத்தையும் மதவாதத்தையும் கடுமையாக நிராகரித்த அவர், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், சட்டம் மற்றும் சமூக விடுதலை என்ற கருத்தாக்கத்தைப் பொறுத்தவரையில் மதத்தை இரண்டாம் நிலையில் வைத்துச் செயற்பட்டார் என்பதை அக்காலத்தில் அவருடன் பழகிய எம்மில் பலர் அறிவோம். எவ்வாறாயினும், இலங்கையிலிருந்து உருவான மற்றுமொரு தலைசிறந்த மனிதநேயவாதி தனது வாழ்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரது இடைவெளியை நிரப்புவதற்கு இன்னொருவர் உருவாகுவாரா என்ற சந்தேகத்தையும் கவலையையும் இது எம்முன் ஏற்படுத்தியுள்ளது.
மகத்தான பண்புகளும் மனிதநேயமும் நிறைந்த சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ, எமது வாழ்நாளில் சட்டத் துறையிலும் மனித உரிமைப் போராட்டக் களத்திலும் செயற்பட்ட மிகச் சில புரட்சிகரமானவர்களிலும் பாரம்பரியங்களுக்கு சவால் விடுத்தவர்களிலும் முன்னணியில் இருந்தார்.
இலங்கையில் அவரைக் கடந்து செல்லக்கூடிய ஒருவர் எவரும் தற்போது எமது பார்வைக்குத் தென்படவில்லை.
எனவே, பசில் அண்ணா, உங்களது பயணம் இனிதாக அமையட்டும்.
கே. விஜேசிங்க
