உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இருநூறு ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தரப்பு வாதங்களை முறையாகக் கருத்தில் கொள்ளாமல், வெளிப்படைத்தன்மையுடைய நியாயமான விசாரணையை நடத்தாமல், சட்டத்தின் முன் முறையாக நிரூபிக்க முடியாத சாட்சியங்களின் அடிப்படையில் தங்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, மூத்த சட்டத்தரணிகள் குழுவின் உதவியுடன் இன்று உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆச்சரியத்தை ஏற்படுத்திய வழக்கு
நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க உள்ளிட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, இந்தத் தீர்ப்பை 2026 செப்டம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏகமனதாக அறிவித்தது.
ஆரம்பம் முதலே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு வழக்கு தொடர்பில் அதிகளவிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வழக்காகவும், சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே தீர்ப்பு அறிவிக்கப்பட்ட வழக்காகவும் அமைந்துள்ளது. இரு தரப்பினரதும் சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டு, தரப்பினரின் வாய்மொழி மற்றும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், சுமார் ஒரு மாதம் என்ற மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்திய ஒரு வழக்காக கருதப்படுகின்றது.
சட்டமா அதிபரினால் 2021 ஒக்டோபர் 4ஆம் திகதி, விசேட மேல் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு, அவர்கள் மீது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாள் வரை, சந்தேகநபர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைத்து, தங்களது தரப்பு கருத்துகளைத் தெரிவித்த நிலையிலேயே வழக்கு விசாரணை தொடர்ந்தது. மேலும், வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே, சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலங்கையின் மூத்த சட்டத்தரணிகளும், மனித உரிமைத் துறையில் பிரபலமானவர்களுமான மூன்று சட்டத்தரணிகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வழக்கிலிருந்து விலகினர்.
சித்திரவதைகள் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்படவில்லையா?
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதி முழுவதிலும் தாங்கள் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தங்களது மத நம்பிக்கைகளுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பன்றி இறைச்சியைக் கூட வலுக்கட்டாயமாக உண்ணச் செய்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது பலர் தங்களது தரப்பு வாக்குமூலங்களை முன்வைத்தபோது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெரிவித்திருந்த போதிலும், பின்னர் வெளியான வழக்குத் தீர்ப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் 25 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த போது, வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 17ஆவது சந்தேகநபரான யாசீம் பாவா அப்துல் ரவூஃப், சிறைச்சாலையிலேயே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, எஞ்சிய 24 சந்தேகநபர்களில் 9 பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து, ஏனைய 15 பேருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது. இதற்கு மேலதிகமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அரசுடைமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேரில் நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. எஞ்சிய 6 பேரில் ஐந்து பேருக்கு தலா 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அப்துல் மனாஃப் மொஹமட் பிரிதௌஸ் என்பவருக்கு மாத்திரம் 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
தீர்ப்புக்குப் பின்னர் பதவி உயர்வு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னரே, நிறைவேற்று அதிகாரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் அரசியல் அதிகாரத் தரப்பினரும், பல்வேறு மதத் தலைமைத்துவங்களும் தீர்ப்பு தொடர்பில் கருத்துகளையும் எதிர்வுகூறல்களையும் வெளியிட்டிருந்தனர். இது இறுதித் தீர்ப்பு தொடர்பில் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், தீர்ப்பு அறிவிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டு சில மணிநேரங்களே கடந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தலைமை நீதிபதியான நவரத்ன மாரசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.
