பௌத்தர்களும் சைவர்களும் ஒரே இடத்தில் வழிபாடு நடத்துவதால் “அமைதி சீர்குலையும்” 

வன்னியில் அமைந்துள்ள பண்டைய வழிபாட்டுத் தலமொன்றில் பௌத்த மற்றும் சைவ பக்தர்கள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதால் அமைதி சீர்குலையும் அபாயம் இருப்பதாக பொலிஸார் வெளியிட்ட அச்சத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துள்ளது.

வெடுக்குநாறிமலை வழிபாட்டுத் தலத்தில் நாளைய தினம் (செப்டெம்பர் 26) பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் அமைதி சீர்குலைவு ஏற்படக்கூடும் என நெடுங்கேணி பொலிஸார் முன்வைத்த காரணங்களை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

“கடந்த முறையைப் போலவே இந்த முறையும் பொலிஸார் செய்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எமது மதச் சடங்குகளைச் செய்வதை யாரும் தடுக்க முடியாது. தடையிடுவதும் நல்லதல்ல. அவற்றை நாம் தொடர்ந்து மேற்கொள்வோம். அதேவேளை, மற்றவர்கள் வழிபாடு செய்வதையும், ஏனைய மதச் சடங்குகளை மேற்கொள்வதையும் நாம் தடுக்க மாட்டோம் என்பதையும் நீதிமன்றத்தில் தெளிவாகக் கூறினோம்.”

‘மோதல் ஏற்படக்கூடும்’ என அர்த்தமற்ற அச்சத்தை வெளியிட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தமை தொடர்பில் பொலிஸார் நீதவானின் கண்டனத்துக்கு உள்ளானதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழில் வெடுக்குநாறிமலை என்றும் சிங்களத்தில் வடுன்னாகல அல்லது வட்டமான பர்வதம் என்றும் அழைக்கப்படும் இப்பகுதியில், பினர போயா தினமான நாளைய தினம் திகதி நிகழ்வொன்றை நடத்துவதற்காக முல்லைத்தீவு, குருந்தி ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் வட மாகாண பிரதம சங்கநாயக்கருமான கல்கமுவே சாந்தபோதி நாயக்க தேரர் அண்மையில் தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

பினர போயா தினத்துடன் கூடிய புரட்டாசி சனிக்கிழமையன்று, அப்பகுதி சைவ தமிழ் மக்களும் அதே இடத்தில் விசேட வழிபாடுகள் மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடவுள்ளதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதி சீர்குலையக்கூடும் என நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் காரணங்களை முன்வைத்திருந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் சைவர்கள் அந்த இடத்தில் வழிபாடு செய்வதற்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதால், அதற்காக புதிதாக அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்பதை நீதவான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியதாகத் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

“எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை போயா தினமாக இருப்பதால், பௌத்த மதத்தவர்கள் தங்களுடைய மதச் சடங்குகளை மேற்கொள்ள அங்கு வருவார்கள் என்றும், அன்றைய தினம் இந்து பக்தர்கள் தங்களுடைய மதச் சடங்குகளை மேற்கொண்டால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்றும் பொலிஸார் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். இன்று நாம் மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிமை உள்ளது. நாம் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தினோம்.”

சைவர்கள் அந்த இடத்தில் சமயச் சடங்குகளை மேற்கொள்வதற்கு மீண்டும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதவான் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“ஏனெனில், இந்த முறை பௌத்தர்கள் தொல்லியல் திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளனர். அந்த அனுமதி சில நிபந்தனைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நிபந்தனைகளுக்கு உட்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அந்த நிபந்தனைகளின்படி, அவர்கள் புதிதாக எதையும் கொண்டு வந்து அங்கு வைக்க முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுடைய மதச் சடங்குகளை முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, வேறு எங்கிருந்தும் நாம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் தெளிவாகவும் வலியுறுத்தியும் கூறினோம். எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.”

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு 222 பீ கிராம அலுவலர் பிரிவில், வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நைனாமடு வனப் பகுதியில் அமைந்துள்ள வடுன்னாகல தொல்லியல் இடம் தற்போது தமது நிறுவனத்தினால் ஆய்வு செய்யப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அந்த இடத்தை தொல்லியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, 2026 செப்டெம்பர் 21ஆம் திகதி குருந்தி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தேரருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றின் மூலம், பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ. சேனரத் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் பழைய பௌத்த விகாரையொன்றுடன் தொடர்புடைய தொல்லியல் சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதன்படி இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பு அனுராதபுரத்தின் ஆரம்ப காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பழைய தூபி, பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று குகைக் கல்வெட்டுகள், கடாரங்கள் செதுக்கப்பட்ட எட்டு குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் உள்ளிட்ட பழைய பௌத்த விகாரையொன்றுடன் தொடர்புடைய தொல்லியல் சான்றுகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பு அனுராதபுரத்தின் ஆரம்ப காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, இந்த தொல்லியல் இடத்தை எதிர்காலத்திற்காகப் பாதுகாப்பது எமது நிறுவனத்தினதும், தாங்கள் உள்ளிட்ட அனைவரினதும் பொறுப்பு எனக் கருதுகிறேன்.”

வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வன்னி வாழ் சைவ தமிழ் பக்தர்களால் வழிபடப்பட்டு வரும் மலைக் கோயில் பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குருந்தி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தேரருக்கு தொல்லியல் திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:

1. இந்த இடத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளை அழித்தல், சேதப்படுத்துதல், சிதைத்தல் அல்லது மாற்றுதல் மேற்கொள்ளக்கூடாது.

2. அன்றைய தின நடவடிக்கைகளுக்காக தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

3. 2026.09.26 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே இந்த இடத்தில் வழிபாடு நடத்தப்பட வேண்டும்.

4. சமயச் சடங்குகளுக்காக புத்தாசனம், தர்மாசனம், கொடிகள், பூஜைப் பொருட்கள், பாய்கள் உள்ளிட்ட கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் இந்த நிகழ்ச்சியின் பின்னர் தொல்லியல் இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

5. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அனைத்து கழிவுகளும் தொல்லியல் இடத்திலிருந்து அகற்றப்பட்டு, அந்த இடம் இருந்த நிலைமையிலேயே சுத்தமாக வைக்கப்பட வேண்டும்.

6. அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அனைவரும் அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும்.

7. தீ மூட்டுதல், மரங்களை வெட்டுதல், நிலத்தில் குழிகளைத் தோண்டுதல் ஆகியவை மேற்கொள்ளக்கூடாது.

8. நினைவுச் சின்னங்களுக்கும் அந்த நிலப்பகுதிக்கும் சேதம் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துவதும், வாகனங்களைச் செலுத்துவதும் மேற்கொள்ளக்கூடாது.

9. அடுப்பு அமைத்தல், தீ மூட்டுதல், உணவு சமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நினைவுச் சின்னங்களிலிருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் மேற்கொள்ளக்கூடாது.

Latest articles

Similar articles