“பொலன்னறுவையின் மன்னர்” என தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டிக்கிரி பண்டா சரத் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில பாடசாலை சிறுமிகளை அசாதாரணமான முறையில் தொட்டு, தனது உடலுக்கு நெருக்கமாகக் கொண்டு வர முயன்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி ஆராய்வதை சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் வேண்டுமென்றே புறக்கணிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறி வருகிறது.
புதிய வீடமைப்புத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர், சில சிறுமிகளை மிகவும் நெருக்கமாகத் தொடும் விதத்தை காட்டப்படும் புகைப்படங்கள் பரவத் தொடங்கி இப்போது பல நாட்களாகின்றன. சமூக ஊடகங்களிலும் சில பிரதான நீரோட்ட இணைய ஊடகங்களிலும் இது தொடர்பாக ஒரு விவாதம் உருவாகியுள்ள நிலையில், பிரதி அமைச்சர் கூறுவது என்னவென்றால், தான் சிறுமிகளை தவறான நோக்கத்துடன் தொடவில்லை என்பதாகும். அந்தச் சிறுமிகள் தமக்கு வணக்கம் செலுத்த முயன்றபோது, தான் அதனைத் தடுத்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் மூலம் அது தொடர்பில் தவறான கருத்தொன்றை உருவாக்கி அரசியல் எதிர்ப்பாளர்கள் குழுவொன்று தமக்கு எதிரான கருத்தை சமூகத்தில் பரப்பி வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் இல்லாத சிறுவர்களுக்கு எதிரான அதிகாரம் படைத்தவர்களின் வன்முறைகள்
பிரதி அமைச்சர் கூறுவது உண்மையா? அல்லது அவர் அந்த சிறுமிகளைத் தவறான முறையில், தீய நோக்கத்துடனேயே தொட்டாரா? என்பதை நம்மில் எவராலும் பார்த்த மாத்திரத்தில் சரியாகக் கூற முடியாது. ஆனால், விசாரணையொன்றை நடத்தி நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்புக்குள் அதனை இலகுவாகத் தீர்மானிக்க முடியும்.
ஒருவர் 16 வயதுக்குக் குறைவான சிறுவருடன், அந்தக் பிள்ளையின் சம்மதத்துடன்கூட, பாலியல் நடத்தையில் ஈடுபடுவது மாத்திரமன்றி, உடல்ரீதியான தொடுதலை மேற்கொள்வதுகூட இலங்கையின் சட்டத்தின் முன் குற்றமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது “பிள்ளையின் சம்மதத்தை வெளிப்படுத்துதல்” எனக் கருதப்படுவதில்லை.
அதனை கண்களுக்கு எட்டிய அளவிலோ அல்லது சமூக ஊடகங்களில் பரவுவதில் மாத்திரம் மட்டுப்படுத்தி அடக்கிவிட அனுமதிப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். சந்தேகமோ உண்மையோ முறையாக வெளிக்கொணரும் நோக்கில், சிறுவர் உரிமைகள் அதிகாரிகளும், குறிப்பாக சிறுவர் பாதுகாப்புக்குப் பொறுப்பான விசேட பொலிஸ் பிரிவான பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகமும் இது தொடர்பில் முறையான விசாரணையையும் தகவல் சேகரிப்பையும் தாமதமின்றி மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், எமக்குத் தெரிந்தவரையில், இதுவரை அவ்வாறான எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.
சம்பவம் தொடர்பாகப் பரவி வரும் புகைப்படங்கள் அல்லது சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரதி அமைச்சரின் தரப்பினரிடம் விடயங்களை கேட்டறிவது மாத்திரம் போதுமானதல்ல. உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனில், பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிகளும் மிகவும் நுணுக்கமானதும் விழிப்புடனும் கூடிய விசாரணையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அது தொடர்பில் பொலிஸாரோ அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ இதுவரை குறித்த பிரதி அமைச்சரிடமிருந்து வாக்குமூலமோ அறிக்கையோ பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
“எங்களிடம் வந்தால் நாங்கள் பார்ப்போம்” – சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள்
ஆனால் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயம் என்னவென்றால், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும், குற்றச்சாட்டுக்குள்ளான பிரதி அமைச்சருடன் தொடர்புடைய அரசியல் அதிகாரமும் இந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமாகும். அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் தனது அறையில் சிறுமியொருவரை பாரதூரமான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் கடுமையான குரல் எழுப்பி, நாட்டின் நீதியை மதிக்கும் குடிமக்களிடையிலும் குறிப்பாக சமூக ஊடகங்களிலும் வீராங்கனையாக மாறியிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட நடைமுறைப் பிரிவின் பணிப்பாளரான சட்டத்தரணி சஜீவனி அபேகோன், இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது, இந்த நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தை முறைகள் குறித்தும், இவ்வாறான விடயங்களில் அவர்கள் மேற்கொள்ளும் உடனடி தலையீடுகள் குறித்தும் கவலை ஏற்படுகிறது. இது இலங்கை சிறுவர்களின் எதிர்காலமும் பாதுகாப்பும் எங்கே இருக்கிறது என்ற பாரதூரமான கேள்வியையும் எழுப்புகிறது.
“பொருத்தமற்ற தொடுதல் ஒன்றுதான் அந்தப் படங்களில் காணப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது கட்டாயமாக பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் அவசியமாகும். அந்தப் பாதிக்கப்பட்டவர் வந்து, இந்தத் தொடுதலினால் நான் அசௌகரியத்திற்கு உள்ளானேன், நான் வெட்கத்திற்கு உள்ளானேன், நான் பயத்திற்கு உள்ளானேன் என்று கூற வேண்டும். அப்போதுதான் அதனை மோசமான தொடுதல் என்று வரையறுக்க முடியும். பாதிக்கப்பட்டவர் முன்வரவில்லை என்றால், இந்த சட்டக் கட்டமைப்பிற்குள் எங்களால் வழக்குத் தொடர முடியாது” என்று அவர் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஆச்சரியமளிக்கும் கூற்றாகும். இந்தக் கூற்றிற்கு அமைய, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொடர்புடைய பிரச்சினைக்கு முகங்கொடுத்த சிறுமிகள் மாதிவெலவில் அமைந்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று, “பொலன்னறுவையின் மன்னர் தாத்தாவின் தொடுதலினால் நான் வெட்கத்திற்கும், பயத்திற்கும், அசௌகரியத்திற்கும் உள்ளானேன்” என முறைப்பாடு செய்ய வேண்டியதாகிறது. அதேபோல், அந்தச் சிறுமிகள் அது தொடர்பில் விசாரணையொன்றையும் கோர வேண்டும்.
இது சிறுமிகள் தொடர்பான சம்பவமாகும். புகைப்படங்களின் அடிப்படையில், அந்தச் சிறுமிகள் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும், அந்தச் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் உரிய புரிதலோ அல்லது அதன் பாரதூரத்தன்மை குறித்த அறிவோ அந்தச் சிறுமிகளுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். இலங்கை என்பது சிறுவர்களுக்கு முறையான பாலியல் கல்வி வழங்குவது பாவம், குற்றம், அவ்வாறான கல்வியைப் பெறுவது வெட்கக்கேடானது எனக் கூறி அதனைத் தடுக்கும் அரசியல்வாதிகள், மத நிறுவனங்கள் மற்றும் தங்களை அறிவாளிகள் எனவும் புத்திஜீவிகள் எனவும் அழைத்துக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் நிறைந்த நாடாகும்.
அத்தகைய நாட்டில், அந்தக் கணத்தில் நிலவிய குழப்பமான சூழலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அந்தக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அருகில் இருந்த பெரியவர்களுக்குக்கூட உடனடியாக சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை நுணுக்கமான விசாரணைச் செயல்முறையின் மூலம் திறமையான விசாரணையாளர்களால் வெளிக்கொணர முடியும். அதற்காக சிறுவர் வைத்திய நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள் மாத்திரமன்றி, ஒலிப்பதிவுகள் மற்றும் ஏனைய சூழ்நிலைச் சாட்சியங்களையும் பயன்படுத்த முடியும். அதற்கான முழுமையான உரிமையும் அங்கீகாரமும் இலங்கையின் சட்ட அமைப்பில் இருப்பதை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அறியாமல் இருக்க முடியாது.
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதன் உண்மையான யதார்த்தம்
எனவே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் கூறுவதைப் போல, சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமிகளே வந்து முறைப்பாடு செய்வதோ அல்லது அது தொடர்பில் அறிக்கை அல்லது வாக்குமூலம் வழங்குவதோ கட்டாயமானதல்ல. உண்மையில், ஆரம்பகட்ட விசாரணையின் போது அது அவசியமான விடயமாக சட்டம் கருதுவதில்லை. இவ்வாறான அறிக்கைகள், வாக்குமூலங்கள் அல்லது சாட்சியங்கள் பெறப்பட வேண்டியது விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னரேயாகும்.
சிறுவர்கள் தொடர்பில் கண்களுக்கு எட்டும் எந்தவொரு குற்றம் தொடர்பிலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் அவசியமில்லை. அவசியமானது, அந்த நேரத்தில் விசாரணையாளர்களுக்குக் காணவோ கேட்கவோ கிடைக்கும் தகவல் மூலங்களின் நம்பகத்தன்மை மட்டுமே. மேலும், முறைப்பாட்டைச் செய்பவர் யார் என்பதும் முக்கியமல்ல. அது தொடர்புடைய சம்பவத்தை எதிர்கொண்ட பாதிக்கப்பட்ட சிறுமியே செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுவதில்லை. அது பாதிக்கப்பட்ட சிறுவரின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அல்லது அவர்களில் எவருமல்லாத அடையாளம் தெரியாத ஒருவராகவும் இருக்கலாம். இல்லையெனில், சம்பவத்தை நேரடியாகக் காணும் பொலிஸார், கிராம அலுவலர்கள் போன்ற அரச அதிகாரிகளும் வெளிப்புற விசாரணையாளர்களாக இருக்கலாம்.
அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதியால் சிறுமியொருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தின் முதல் முறைப்பாடு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்ததும் பொலிஸாரிடமிருந்து அல்ல; சம்பவத்தை அறிந்த ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்தே ஆகும். அதிகாரசபையும் அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரையில், அந்தப் புகைப்படங்களில் பொருத்தமற்ற தொடுதல் காணப்படுவதாக பணிப்பாளரே ஏற்றுக்கொண்டால், அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வேறு எந்த முறைப்பாடும் தேவையில்லை. அதற்குத் தேவையானது தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்துவது அல்லது அது தொடர்பில் பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவது மட்டுமே. அதன் பின்னர் கிடைக்கும் தகவல்கள், வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற விடயங்களின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்துச் செல்வதா அல்லது குற்றமொன்று இடம்பெறவில்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும். விசாரணை எவ்வளவு வெளிப்படையாகவும் பாரபட்சமற்றதாகவும் மேற்கொள்ளப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக யார் சரியானவராக இருந்தாலும் நீதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு தீர்மானங்களை எடுப்பது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏற்றதல்ல.
இவ்வாறான சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முறைப்பாடு இல்லாமல் தமக்கோ, அதிகாரசபைக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ தலையிட முடியாது என்று அதிகாரசபையின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் கூறும் விடயத்தில் எந்தவிதமான சட்ட அடிப்படையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சில குறுகிய சட்ட விதிகளை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவை சரியானவை அல்ல என்றால், சரியானது எது என்பதைச் சொல்வதும் அவருடைய பொறுப்பாகும். ஏனெனில் அவர் பெயரளவிலான ஒரு சட்டத்தரணி அல்ல; நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக சட்டரீதியாக அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பை வகிக்கும் அதிகாரி ஆவார்.
இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, இவ்வாறான குற்றங்கள் அறிவிக்கத்தக்க குற்றங்களின் வகைக்குள் வருகின்றன. அதாவது, நீதிபதியின் உத்தரவு அல்லது பிடியாணை இன்றி கைது செய்யக்கூடியதும் விசாரணைக்கு உட்படுத்தக்கூடியதுமான குற்றங்களாகும். சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் பாரதூரமான பாலியல் வன்முறைகள் போன்றவை இதில் அடங்குகின்றன.
“1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32(ஆ) பிரிவின்படி, ஏதேனும் அறிவிக்கத்தக்க குற்றத்துடன் தொடர்புடைய நபர் அல்லது அவ்வாறு தொடர்புடையவர் என ஒருவருக்கு எதிராக நியாயமான முறைப்பாடு கிடைத்திருந்தாலோ அல்லது அதற்கு எதிராக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருந்தாலோ, அல்லது அவ்வாறு ஒருவரைச் சார்ந்து நியாயமான சந்தேகம் இருந்தாலோ, அத்தகைய ஒருவரைக் கைது செய்யலாம். அதேபோல், 1995 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தச் சட்டம்) 310(அ) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் சிறுவர்களிடம் இருந்து சட்டவிரோதமான பாலியல் நன்மைகளைப் பெறுதல் என்ற குற்றமும் இதற்கு தொடர்புடையதாகும்.”
அதேபோல், சிறுவர்களுக்கு எதிரான பொருத்தமற்ற தொடுதல் என்பது குற்றவியல் சட்டத்திலும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டங்களிலும் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு பாரதூரமான குற்றமாகும். அதற்கு எதிராக போதுமானதற்கும் மேலான சட்ட விதிகள் உள்ளன. அந்தத் தொடுதலின் மூலம் பிள்ளைக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது ஏற்படும் நிலை இருந்தாலோ, அது தொடர்பில் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் மன வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தண்டனைச் சட்டத்தின் 308(அ) பிரிவின் மூலமும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது 18 வயதுக்குக் குறைவான பிள்ளையின் பாதுகாவலராக இருப்பவராகவோ அல்லது வேறு ஒருவராகவோ இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறது.
பல்வேறு சட்டங்கள் உள்ள நாட்டில் சிறுவர்களின் தலைவிதி
1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மாத்திரமன்றி, 1991 ஆம் ஆண்டில் இலங்கையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச சிறுவர் உரிமைச் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் உடன்படிக்கைகள் அனைத்தினதும் அடிப்படையாக இருப்பது சிறுவர்களை அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பதாகும். அந்த அனைத்து சட்டக் கருத்துக்கள், விதிமுறைகள் மற்றும் சட்டங்களும் பெயரளவிலானவையாக மாறுவதற்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் காட்டும் அலட்சியமானதும் சட்டவிரோதமானதுமான கொள்கைகளே காரணமாகின்றன.
அதேபோல், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணியாகக் குறிப்பிடப்படும் “சிறுவர்கள் அனைத்து வகையான துஷ்பிரயோகங்களிலிருந்தும் பாதுகாத்தல்” என்ற கொள்கையும் அந்த அதிகாரசபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவின் பணிப்பாளரின் கூற்றினால் வெடித்துச் சிதறுகிறது. அவர் கூறிய “பாதிக்கப்பட்டவர் வந்து நான் அசௌகரியத்திற்கும், வெட்கத்திற்கும் உள்ளானேன் என்று கூற வேண்டும்” என்ற கூற்று, இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான தனியார் வகுப்பு ஆசிரியரின் துன்புறுத்தலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் நடந்துகொண்ட விதத்துடன் ஒத்துப்போகிறது. அந்தச் சம்பவத்தில் சரோஜா போல் ராஜ் அமைச்சரால் தற்கொலை செய்துகொண்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரே பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டனர்; அந்தப் பெற்றோர் தம்மைச் சந்திக்க வராதது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
பிரதி அமைச்சர் டிக்கிரி பண்டா சரத் மாத்திரமன்றி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான சமூக ஊடகங்களை நடத்துபவர்களும் இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கும் கருத்து வியப்புக்குரியது. அவர்களின் கருத்துப்படி, வரலாற்றில் இருந்தே பல்வேறு அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலிருந்தே, இதைவிட பாரதூரமான செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை அவ்வளவு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமல்ல என்பதாகும். தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள் என்றும், தேசிய மக்கள் சக்தியின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே எனவும் பிரதி அமைச்சர் கூறுகிறார்.
தேசிய மக்கள் சக்திக்கும் அதன் மத்திய செயற்குழு உறுப்பினரான டிக்கிரி பண்டா சரத்துக்கும் ஏற்ப, ஏழை மக்களுக்கு நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுத்து, அந்த வீடுகளில் குடியேறச் செல்லும் சிறுவர்களின் உடல்களைத் தவறான முறையில் தொடுவது அல்லது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்துவது அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விடயமல்ல.
அப்படியானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினரிடமும் நாம் கேட்க வேண்டியது, சமூகத்தில் கௌரவமும் மரியாதையும் கொண்ட பிரபுக்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், தொழில்முறை நிபுணர்கள் போன்ற “கௌரவமான குடிமக்கள்” நாட்டின் குழந்தைகளின் கௌரவத்தை களங்கப்படுத்தி, பாலியல் வன்முறைகளை மேற்கொண்டு செய்யும் தவறுகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்பதாகும்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அண்டை நாடான இந்தியாவில் ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு அந்நாட்டில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மதத் தலைவரான ஆசாராம் பாபு சிறுமியொருவருக்கு எதிராக மேற்கொண்ட பாலியல் வன்முறை தொடர்பில் வழங்கிய தீர்ப்பாகும். POCSO (The Protection of Children from Sexual Offences Act 2012) சட்டத்தின் கீழ் அந்தத் தீர்ப்பை வழங்கியபோது, நீதிமன்ற நீதிபதி, குற்றவாளியின் சமூக அந்தஸ்து அல்லது அதிகாரம் மட்டுமன்றி, மக்கள் அவரை தெய்வமாகக் கருதுவதையும் நீதிமன்றம் எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளாமல் தண்டனை வழங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். சிறுவர் துஷ்பிரயோகக் குற்றத்திற்கு ஒருவரின் சமூக அந்தஸ்தோ அல்லது குடிமை அதிகாரமோ தொடர்புடையதல்ல என்பதுடன், அவ்வாறானவர்கள் செய்யும் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அந்தத் தீர்ப்பு உலகிற்கு கற்றுக்கொடுத்தது.
“சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பு” என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் மேடைகளில் முழங்கிய அவர்களின் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற வாக்குறுதி ஆவணத்தின் 82ஆம் பக்கத்தில் கண்ணைக் கவரும் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை தமது கட்சியின் அரசியல்வாதிகள் அல்லது ஆதரவாளர்களால் நாட்டின் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களும் வன்முறைகளும் இடம்பெறக்கூடாது என்பதையே அது குறிக்கலாம்.
எனினும், கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளை மீண்டும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வாக்காளர்கள் மூன்றில் இரண்டு அதிகாரத்தை வழங்கிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த வாக்குறுதி தேசிய மக்கள் சக்திக்கு மறந்துபோனது நாட்டிற்கு துரதிர்ஷ்டவசமான விளைவுகள் ஏற்படுவதற்கான முன்னறிவிப்பா என்பதை கேட்காமல் இருக்க முடியாது.
கே. விஜேசிங்க
