வெளிநாட்டில் இடம்பெற்ற ஒரு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது, இலங்கை இராணுவப் படையினர் பல சிறுவர்களை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஹெய்ட்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது பல ஆண்டுகளாக இடம்பெற்ற இந்தக் குற்றங்கள் தொடர்பில், 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை இராணுவம் தனது அறிவை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து இதுவரை அனுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய படைப்பிரிவின் முதல் குழுவினர் ஹெய்ட்டியில் தரையிறங்கிய பின்னரே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட நம்பகமான சாட்சியங்களுக்கு அமைய, 2005 முதல் 2007 வரையான காலப்பகுதியில் குறைந்தது 134 இலங்கை இராணுவத்தினர் ஹெய்ட்டியில் சிறுவர்களை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சில சிறுவர்களுக்கு எட்டு வயதே இருந்துள்ளது. சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் 108 இலங்கை இராணுவத்தினர் ஹெய்ட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அத்தகைய குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்நாட்டு இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட பின்னர் அவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்” என இராணுவப் பேச்சாளர் வருண கமகே, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், உள்நாட்டுச் சட்டத்திற்கு அமைய கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஹெய்ட்டி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் எவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளை, அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அனைத்து கட்டளை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசத் திட்டம் (ITJP) வெளிப்படுத்தியிருந்தது.
2005 நவம்பர் முதல் 2006 ஜூன் வரையில் ஹெய்ட்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்ட மூன்றாவது படைப்பிரிவின் கெமுனு ஹேவா படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக, தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இருந்துள்ளார்.
இலங்கையிலிருந்து அனுப்பப்படும் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசேட பரிசோதனை நடவடிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் இணக்கத்துடனும், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடனும், 2016ஆம் ஆண்டு முதல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அரசாங்கம் ஒப்படைத்திருந்தது.
எனினும், அதற்கு ஒரு வருடத்திற்குப் பின்னர், அந்தப் பரிசோதனைச் செயல்முறையைத் தவிர்த்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இராணுவம் தெற்கு லெபனானுக்கு ஒரு படைப்பிரிவை அனுப்பியிருந்தது. 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் பரிசோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது, அவர்களில் 49 பேர் பணிக்காக அனுப்பப்பட்டதை ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றின் மூலமே அறிந்துகொண்டிருந்தது.
“பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத இராணுவத்தினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது, மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை முழுமையாக மீறுவதாகும்” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவி தீபிகா உடகம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டு எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து படையினரை அனுப்புவது ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அரச அதிகாரிகளிடமிருந்து தேவையற்ற அழுத்தங்கள் விடுக்கப்படுவதாகக் கூறி, 2024 ஜூன் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தப் பரிசோதனைச் செயல்முறையிலிருந்து விலகியது.
“உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்து, இலங்கை பொலிஸின் சில விண்ணப்பதாரர்களுக்கு மனித உரிமைகள் சான்றிதழை வழங்குமாறு ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்தார்” என 2024 டிசம்பர் மாதம் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படும் படையினரைப் பரிசோதிப்பதற்காக அமைச்சுகளுக்கு இடையிலான விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை பின்னர் இலங்கைக்கு பரிந்துரைத்திருந்தது.
அத்தகைய நிறுவனம் இதுவரை அமைக்கப்படாத நிலையில், தற்போது வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைப் பரிசோதிப்பதும் கண்காணிப்பதும் இராணுவத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹெய்ட்டியில் கும்பல் ஒழிப்பு படையில் (Gang Suppression Force – GSF) இணைவதற்காக இலங்கையிலிருந்து புதிதாக அனுப்பப்படும் படைப்பிரிவில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைச் சேர்ந்த 1,132 பேர் உள்ளடங்குகின்றனர்.
அவர்களில் 28 அதிகாரிகளும் 289 ஏனைய படையினரும் அடங்கிய முதல் குழு, கேர்ணல் துஷாந்த பிரியங்கர தலைமையில் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ஹெய்ட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்கியுள்ளது.
அவர்களின் கடந்தகால மனித உரிமை நடத்தை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகமானதுமான பொறிமுறையொன்றின் மூலம் முன்கூட்டியே பரிசோதனை செய்யாமல் அவர்களை அனுப்ப வேண்டாம் என பல சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்தப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
அனுப்பப்படும் அதிகாரிகளின் பெயர்களை பகிரங்கப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் கருத்தில் கொள்ளப்படவில்லை. படையினரின் மனித உரிமைத் தகுதியை உறுதிப்படுத்துவது தங்களது பொறுப்பே என இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு பரிசோதனைச் செயல்முறையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பெயர்ப்பட்டியல் அமெரிக்காவுக்கும், மேலதிக பரிசோதனைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
அந்தந்த நாடுகளின் கொடியின் கீழ் செயல்படும் கும்பல் ஒழிப்பு படையின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையினால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையவுள்ள கும்பல் ஒழிப்பு படை தொடர்ந்து பேணப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விரைவில் விவாதிக்கவுள்ளது.
