வடக்கில் நூற்றுக்கணக்கான காணி உரிமையாளர்கள்; அரசு வழங்க முன்வரும் இழப்பீட்டை ஏற்க மறுக்கின்றனர்

வடக்கில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை விரிவுபடுத்துவதற்காக நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள இழப்பிட்டு தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்காமலேயே, அந்தக் காணிகளை அரசுடமையாக்குவதற்காக மக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக 1986ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, இன்றுவரை காணியின்றி தாய் நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வரும் குறித்த தமிழ் மக்கள், தமது காணிகளை கைப்பற்றியமைக்காக அரசாங்கம் தீர்மானிக்கும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அரசாங்கத்தினால் தன்னிச்சையாகத் தயாரிக்கப்பட்டுள்ள உறுதிமொழி பத்திரத்தில் தாங்கள் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான 660 ஏக்கர் (267.22 ஹெக்டேயர்) தனியார் காணிகளை கையகப்படுத்தி, அப்போதைய அரசாங்கத்தினால் 1986 நவம்பர் மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில், அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறி தமது உறவினர்களின் வீடுகளிலோ அல்லது வாடகை வீடுகளிலோ வசித்து வந்தபோதிலும், தமது காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

660 ஏக்கர் காணிகளுக்கு உரிமை கோரும் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாகும் அரச அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதில் வழங்கியிருந்தது.

விமான நிலையத்திற்காக காணிகளை கையகப்படுத்தி அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக காணிகளை இழந்த 538 பேர், தமது காணிகளின் உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான உத்தியோகபூர்வ ஆவணங்களை வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 445 பேர் தமது காணிகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதுடன், எஞ்சிய 48 பேர் இது தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தையும் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கவில்லை. மேலும், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்காக அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட தமது அதே காணிகள் மீண்டும் தமக்குத் வேண்டும் என மேலும் 45 பேர் வலியுறுத்தி வருகின்றனர் என பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

தமது காணியின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் இல்லாத மேலும் 105 பேரின் பெயர்களும் இழப்பீடு வழங்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1986ஆம் ஆண்டு விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கத்தினால் காணிகள் கையகப்படுத்தப்பட்டதால் காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், இந்த அனைத்து குழுக்களையும் சேர்ந்த, காணிகளை இழந்த தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மர்தலிங்கம் பிரதீபன் ஆற்றிய உரையின் மூலமும், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளின் அளவு 660 ஏக்கர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

“பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில், வடக்கு மயிலிட்டி, தெற்கு மயிலிட்டி, கிழக்கு பலாலி, குரும்பசிட்டி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டு 267.22 ஹெக்டேயர் காணிகளை பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக கையகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறக்குறைய 660 ஏக்கர்.”

கலந்துரையாடலின் நோக்கத்தை விளக்கியதைத் தொடர்ந்து, குறித்த காணிகளுக்காக இழப்பீட்டை பெறுவதற்குச் சம்மதம் தெரிவிக்கும் வகையில் அதிகாரிகளால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உறுதிமொழி பத்திரத்தில், காணியிழந்தவர்களின் கையொப்பங்களைப் பெறுவதற்கு மாவட்டச் செயலர் முயற்சித்த வேளையில், அவ்வுறுதிமொழி ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது, “தீர்மானிக்கப்படும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, காணிகளை இழந்தவர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திடுவதற்கு ஏதேனும் பிரச்சினையாக உள்ளதா என மாவட்ட செயலாளர் அந்த மக்களிடம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்காவது அம்சம் பிரச்சினையானது என காணிகளை இழந்த மக்கள், தெரிவித்துள்ளனர்.

“காணிக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்துகொண்ட பின்னரே கையெழுத்திடுவதற்கு நான் இணங்குகிறேன்” என்பதே குறித்த நான்காவது அம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகும்.”

அதில் குறிப்பிடப்பட்டிருப்பது காணிக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான விடயமே தவிர, இழப்பீட்டுத் தொகை குறித்தது அல்ல என்பதனை தெளிவுபடுத்திய மாவட்ட செயலாளர், “அதற்குக் கீழே உங்களுடைய கருத்துகள் ஏதேனும் இருந்தால் எழுதலாம். இதில் நாங்கள் தொகை குறித்து எதுவும் கூறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையில் பங்கேற்பதற்காக மட்டுமே தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க முடியும் என்றும், அந்தச் உறுதிமொழி பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 4ஆவது பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் காணிகளை இழந்துள்ள மக்கள் மாவட்ட செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

“எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம் சேர். இதில் உள்ள நான்காவது பகுதியை நீக்கி அச்சிட்டு எங்களிடம் கொடுங்கள். நாங்கள் கையெழுத்திட்டு தருகிறோம். அப்படிச் செய்தால் வேலை முடிந்துவிடும் அல்லவா சேர். எந்தப் பிரச்சினையும் இல்லை. இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்வதற்கு மட்டும் நாங்கள் சம்மதிக்கிறோம்.”

குறித்த உறுதிமொழி பத்திரத்தில் சர்ச்சைக்குரிய பிரிவை நீக்கிவிட்டு, அந்த பத்திரத்தில் கையெழுத்திடுமாறு மாவட்ட செயலாளர், காணிகளை இழந்துள்ள மக்களிடம் மீண்டும் கோரியுள்ளார்.

எனினும், தங்களது பங்களிப்பு இன்றி தயாரிக்கப்பட்ட உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிடுவதை மக்கள் நிராகரித்துள்ளனர்.

பலாலி விமான நிலையத்திற்காக காணி கையகப்படுத்தப்பட்டதால் தமது காணியை இழந்த ஒருவர், 1986ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கான தற்போதைய பெறுமதியை கணக்கிட்டு, அதனை உறுதிமொழி பத்திரத்தில் உள்ளடக்குமாறு மாவட்ட செயலாளரிடம் கோரியுள்ளார். அவ்வாறான மதிப்பீட்டுப் பெறுமதி குறிப்பிடப்படாத உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு மக்கள் தயாராக இல்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தமது காணிகளை அரசாங்கம் கையகப்படுத்துவதற்கு மக்களின் விருப்பத்தை எழுத்துமூலம் பெறுவதற்கு முன்னர், அந்தக் காணிகளுக்காக அரசாங்கம் மதிப்பீடு செய்யும் பெறுமதியை முதலில் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றிய மற்றொருவரும் மாவட்ட செயலாளரிடம் வலியுறுத்தினார்.

“40 வருடங்களாக இதற்காக பாடுபட்டு, இறுதியில் எங்களால் முடியாத நிலை ஏற்பட்டதால்தான், ‘நாங்கள் காணியை வழங்குகிறோம் என்றால், நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டோம். இன்றும் நீங்கள் எங்களை வரச் சொல்லிவிட்டு, அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் திணைக்களம் பெறுமதியை மதிப்பீடு செய்யும் என்று கூறுகிறீர்கள். முதலில் நீங்கள் மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் வாருங்கள், நான் எனது காணிகளை உங்களுக்குக் காட்டுகிறேன். எனது காணி அங்கே இருக்கிறது; தார் வீதியிலிருந்து கையை நீட்டினால் எட்டும் தூரத்தில்தான் எனது காணி… உங்களுக்கு அதற்கும் ஒரே விலை, இதற்கும் அதே விலை. காணிகள், வீடுகள், கட்டிடங்கள், கிணறு நீங்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு ஒரு கிணற்றைக் கூட தோண்ட முடியுமா? நீங்கள் இப்போது affidavit ஒன்றை வழங்கி அதில் கையெழுத்திடச் சொல்கிறீர்கள். காணியை ஒப்படைக்கும் ஆவணம் என்பது எனது விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்டு, அதில் நான் கையெழுத்திடுவதாகும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப எழுதிவைத்த ஆவணத்தில் கையெழுத்திட சொல்வது, பாடசாலைகளில் செய்வதைப் போல இருக்கிறது.”

மாவட்ட செயலாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரங்களில் கையெழுத்திடுவதனை நிராகரித்து, காணிகளை இழந்த அனைவரும் அந்த கலந்துரையாடலில் இருந்து எழுந்து வெளியேறியதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

விமான நிலைய அபிவிருத்திக்காக என்று கூறி அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தி விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, அவை விமான நிலைய அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என காணியை இழந்த பெண்ணொருவர் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“இந்தக் காணிகளுக்காக நாம் இன்றும் பாடுப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று எங்களுடைய காணிகளைப் பிடித்து, 60,000 ரூபாய் சம்பளம் கொடுத்து விவசாயம் செய்கிறார்கள். நீங்கள் வருமானம் ஈட்டுகிறீர்களே தவிர, பாதுகாப்பு வலயத்தை கூட அமைக்கவில்லை, விமான நிலையப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. தமிழர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கிறீர்கள். எத்தனை ஆண்டுகளாக இந்த காணிகளைத் தருவதாகக் கூறி வருகிறீர்கள்? எத்தனை ஆண்டுகளாக இந்த மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்? ஓரிரு வருடங்கள் அல்ல, எங்கள் காணிகளை விட்டு நாங்கள் வெளியேறி 34, 35 ஆண்டுகள் ஆகிவிட்டன.”

“எங்களை நான்கு, ஐந்து தடவைகள் வரவழைத்து அலைக்கழிக்காமல், இழப்பீடாக எவ்வளவு தொகை வழங்கப்படும், எவ்வளவு காலத்திற்குள் வழங்கப்படும் என்றுதான் நாம் கேட்கிறோம். ஆனால், அதற்கு சரியான பதில் இவர்களிடம் இல்லை” என மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இருந்து வெளியே வந்த மற்றுமொரு காணி உரிமையாளர், பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles