ஈரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 103 பேர் பலி

ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி (Qasem Soleimani) அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நினைவு நாளில் அவரது கல்லறை அருகே இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் பள்ளிவாசலுக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்ததில் பலர் காயமடைந்ததாக அரச ஊடகமாக ஐரிப் (Irib) தெரிவிக்கின்றது.

இது ஒரு “பயங்கரவாத தாக்குதல்” என கெர்மனின் பிரதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வீதியில் உடல்கள் இருப்பதையும், அம்பியுலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைவதையும் காணொளிகள் காட்டுகின்றன.

குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை மற்றும் எந்தக் குழுக்களிடமிருந்தும் உடனடி உரிமைகோரல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், அரேபிய பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) மற்றும் பிற சுன்னி ஜிஹாதி குழுக்கள் அண்மைய ஆண்டுகளில் நாட்டில் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஷியா வணக்கஸ்தலங்கள் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளன.

2020இல் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்னர், தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு பின்னர், ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நபராக சுலைமானி காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles