ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்ற,யாழ்ப்பாணம், வேலணையில் இடம்பெற்ற, பொங்கல் நிகழ்வில் வைத்த பொங்கல் பொங்கியதோ இல்லையோ? ஜனாதிபதி விஜயம் குறித்த விமர்சனங்கள், காரசாரமான கருத்துகள் வடக்கில் பொங்கி வழிந்து, வடிந்தோடுகின்றன.
ஜனாதிபதியின் பொங்கல் பண்டிகையுடன் இணைந்ததான வடக்கு விஜயத்திற்கு சாதாரண மக்களிடையே வரவேற்பு இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த மக்களுடனான அவரது உரையாடல், அவர் எடுத்துக்கொண்ட படங்கள் மற்றும் அவருடன் பிடிக்கப்பட்ட ‘செல்பி’கள் இதற்கு சான்று. இலங்கையின் அண்மைய வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பதவிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில், குறைந்தது இரண்டு தடவைகள் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியாக மாத்திரமல்ல, வடக்கு தமிழர்களுடன் மிக நெருக்கமான உறவை பேணுவதாக வெளிப்படுத்திக்கொண்ட ஒரு ஜனாதிபதியாகவும் அனுர குமார திசாநாயக்கவே பதிவாகியுள்ளார்.
எனினும் இது மாத்திரம் போதுமா? என்பதே வடக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய அரசில் தலைவர், செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் வாதமாக மாறியுள்ளது. குறிப்பாக அவர் பொது மேடைகளில் ஆற்றிய உரைகளும் இந்த எதிர்ப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. கொடூர யுத்தத்தால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழர் தாயக மக்கள் தற்போதைய ஜனாதிபதியிடமும் தமக்கான நீதியை கோரி நிற்கின்றனர். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், யுத்தக் குற்றங்களுக்கான நீதி, காணி விடுவிப்பு, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் மற்றும் அதிகாரங்களை பகிரக்கூடிய ஒரு அரசியல் தீர்வு என்பன அந்த மக்களின் கோரிக்கைகளில் பிரதானமானவை, அதனைவிட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மனித புதைகளில் குறித்த நியாயமான விசாரணை, பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட இந்தப் பட்டியல் நீள்கிறது. எனினும் அனைத்து மக்களுக்குமான தலைவராக ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து கரிசனைக் காட்டாத நிலையில் பொங்கல் பரிசாக செல்பியை வழங்கிவிட்டு கொழும்புத் திரும்பியுள்ளார் என்பதே முன்வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டு.
ஆயுதப் போராட்டம் தவறு என எப்படிச் சொல்வார்?
“வட மாகாண இளைஞர்கள் யுத்தத்தில் பங்கேற்று அழிவைத் தேடிக்கொண்டனர். பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ ஆரம்பித்தனர்” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனவரி 16ஆம் திகதி கொக்குவிலில் இடம்பெற்ற ‘முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு முன்னாள் போராளிகளிடையே கடும் எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. “ஜனாதிபதியும் ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பின் ஒரு பிரதிநிதி என்பதை மறந்துவிடக்கூடாது” என கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி (பெயர் குறிப்பிடவிரும்பாத) குறிப்பிடுகின்றார். “ஜனாதிபதி எமது தமிழீழ போராட்டத்தை எப்படி குறைத்து மதிப்பிடுவார். நாங்கள் ஆயுதம் ஏந்தியது சிங்கள பேரினவாதம் கொள்கைக்கு எதிராகவே. எங்களுக்கான உரிமையை உறுதிப்படுத்தியிருந்தால் நாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தப்போகின்றோம். இன்று வரை அந்த நிலைமைத் தொடர்கிறது. இவராவது புரிந்து செயற்படுவார் எனப் பார்த்தால் இவரும் இனவாத சிந்தனையுடன் எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுக்கின்றார்.” என்கிறார் அவர்.
“நாங்கள் ஆயுதம் ஏந்தியது ஒன்றும் வேறு வேலைவெட்டி இல்லாமல் இல்லை. எங்களை அடக்கியாள சிங்கள பேரினவாதம் முயன்றது. அதனை எதிர்த்தோம். இன்றும் அந்த நிலைமைதான். மோதல் முடிந்து 16 வருடங்களின் பின்னரும் என் மக்களுக்கான நீதி கிடைக்கவில்லை. என் மக்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் நாங்கள் அழிவைத் தேடிக்கொண்டதாக, நாங்கள் எந்த மண்ணில் இரத்தம் சிந்திமோனோ? அதே மண்ணில் வைத்து சொல்கிறார்.” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், முல்லைத்தீவைச் சேர்ந்த முன்னாள் போராளி (பெயர் குறிப்பிடவிரும்பாத) ஒருவர்.
தமிழர்களை அச்சுறுத்தும் ஜனாதிபதி
இலங்கையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கில் உள்ள ஒரு விகாரையைச் சுற்றி இனவாதத்தின் அடிப்படையில் மக்கள் கூடிவருவதாக கூறியிருந்தார். “ஒவ்வொரு போயாவிற்கும் விகாரைக்கு அருகில் கூடுகின்றார்கள். காணிக்காக அல்ல, இனவாதத்திற்காக. ஒவ்வொரு போயாவிற்கும் வந்து அங்கு கூச்சலிடுபவர்களுக்கு அங்கு காணி இருக்கிறதா என்பதைக் கண்டறியுமாறு எங்கள் புலனாய்வு பிரிவிடம் நான் கூறினேன். அதனால் அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறு சிறு இடங்களில் இனவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றன.” என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
எனினும், காணி உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்களை விசாரணை செய்ய அரச புலனாய்வு அமைப்பை கோரியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த விடயத்தை கண்டித்த முன்னாள் எம். பி., எம். ஏ. சுமந்திரன், வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு எவரும் போராடலாம் என வலியுறுத்தினார்.
“நிலத்திற்காகப் போராடும் மக்கள் நில உரிமையாளர்கள் அல்ல என்றும், அவர்கள் யார் என்பதை விசாரித்து கண்டுபிடிக்க சிஐடி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது மிகவும் மோசமான செயல். நிலத்தை விடுவிக்கக் கோரி நில உரிமையாளர்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டுமா? தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக இராணுவம் அங்கு உள்ளது. அவர்களின் விடுதலையைக் கோர யாருக்கும் உரிமை உண்டு.”
இதேவேளை, நயினாதீவு புராண ரஜமகா விகாரையின் விகாராதிபதி மற்றும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்கர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரரை சந்தித்த ஜனாதபதி தையிட்டி விகாரை தொடர்பில் பேசியிருந்தார். இதுத் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்ட தேரர், பௌத்த மதத்தின் உயர் பீடங்களையும் தேரர்களையும் பகைத்துக்கொண்டு தீர்மானங்களை எடுக்க ஜனாதிபதி தயங்குவதாக குறிப்பிட்டிருந்தார். “சாமிமாரோட (தேரர்களுடன்) சிக்கல்கள் இருக்குதானே? இந்த சாமி சொல்வதை கேட்பதில்லை. ஏதாவது செய்தால் பெரிய சாமிமார் பக்கம் பிரச்சினை.” தேரரின் கூற்றுப்படி ஜனாதிபதி தீர்மானம் எடுப்பதில் பெளத்த தேரரின் அழுத்தங்களை எதிர்கொள்கிறார் என்ற விடயம் உறுதியாகிறது.
நடைப்பயிற்சியும் பலாலி காணி விடுவிப்பும்
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி அனுர, பலாலி வீதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. “நான் போட்டுவாரன்” என வடக்குத் தமிழர்களைப் போல் அவர் சொல்லிவிட்டு செல்வதும் பலராலும் பாராட்டப்பட்ட அதேவேளை, அவர் நடந்து சென்ற அந்த பிரதேசத்தில் பல்லாயிரக்காண தமிழ் மக்களின் தனியார் காணிகள் படையினர் வசம் காணப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.
“ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது எனச் சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவீகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறன. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.” என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.
வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. ஜனாதிபதி ஒரு இராணுவ அதிகாரியுடன் ரோட்டில் நடந்துச் செல்லும் அளவுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. அப்படியாயின் ஏன் இவ்வளவு இராணுவத்தை ‘குவித்து வைத்துள்ளீர்கள்’ எனவும் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள்
ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் எழுந்துள்ளது. முன்னை நாள் ஜனாதிபதிகள் இவ்வாறு வடக்கில் நிகழ்வுகளில் பங்கேற்றபோதெல்லாம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த கட்சிகள் பங்கேற்குமா இல்லையா என்பது தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வதில்லை, அழைப்பு விடுக்கப்படும். இதுவே நாகரீகமான நடைமுறையும்கூட, ஆனால் ஜனாதிபதி அனுர குமார பங்கேற்ற நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக கட்சிகளின் தலைமைகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழரசுக் கட்சி முதலில் முன்வைத்திருந்தது.
வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடத்திய அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் இதுவொரு ஜேவிபியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் நிகழ்வு என்ற வகையிலேயே தமிழரசுக் கட்சி புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறெனினும் 16ஆம் திகதி கொக்குவிலில் இடம்பெற்ற முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாத ஜனாதிபதி
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. அதேவேளை, மன்னாரில் ஹேலிஸ் பென்டொன்ஸ் லிமிடெட் (Hayleys Fentons Limited) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் அன்றைய தினமே இடம்பெற்றிருந்தது.
மன்னார் தீவில் இரண்டு புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஓகஸ்ட் 2, 2025 அன்று மன்னார் நகரில் தொடர் போராட்டம் ஒன்னு ஆரம்பிக்கப்பட்டதோடு, 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்ட கட்டுமானப் பணிகளை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, ஓகஸ்ட் 13, 2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தீர்மானித்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
எனினும் தற்போது 20 மெகாவாட் திட்டத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, 50 மெகாவாட் திட்டத்திற்கு அடிக்கல்லை நாட்டிவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார்.
“இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அழிவுகரமான முறையில் நிறுவப்பட்ட காற்றாலைகள் மீது உள்ளூர்வாசிகள் நடத்திய போராட்டத்தை எதிர்கொண்டு, மன்னார் தீவில் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ள இரண்டு புதிய காற்றாலைகள் தொடர்பான மன்னார் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஓகஸ்ட் 13, 2025 அன்று ஜனாதிபதி அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.” என, பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவிக்கின்றார்.
“அதானிக்கு வழங்க இருந்த 52 காற்றாலைக்குரிய இடங்களும் பணிகளும் நிறுத்தப்படவில்லை. அதானியின் கம்பனி தான் வெளியேறியதே தவிர திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை.” என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத் தலைவர்களால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் ஏராளம், அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு புதிய பயணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளிடமும் கூட மிகச் சிறிய அளவிலேனும் இருந்தது.
ஆனால், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஒரு வருடத்தைக் கடந்த செயற்பாடுகள் அனைத்து நம்பிக்கைகளையும் சுக்குநூறாக்கிய இருக்கிறது. குறிப்பாக கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரதானமான கோரிக்கைகள்/பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் நம்பிக்கைகத்தரக்கூடிய எந்தவொரு வார்த்தையையும் வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போதும், இளைஞர் யுவதிகளை இராணுவத்திற்கும், பொலிஸுக்கும் சேருங்கள் என்றார், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தவறு என்றார், தையிட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சிஐடி கொண்டு ஆராயவுள்ளதாக எச்சரித்தார், நடைபயணம் செய்தார், கொழும்புத் திரும்பினார்.
ச.பார்தீபன்
thibankannan@gmail.com
Article published in thamilan.lk
