பிள்ளையான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலவசமாக பியர் வழங்கினாரா?

இதுவொரு Factcrescendo கதை

கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தேர்தல் பிரச்சார ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்ட பியர் கேன்களுடனான படத்துடன் கூடிய பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் மக்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என பெக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பியர் கேன்களில் தனது பிரச்சார ஸ்டிக்கர்களை ஒட்டி இலவசமாக மக்களுக்கு விநியோகித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் “ எங்கள் பிள்ளையான் அண்ணனின் சாராய டின் அரசியல் ” இம் மாதம் 10 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (10.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதுதொடர்பான பல்வேறு சமூக ஊடக பகிர்வுகளை எமது சகோதர மொழி மூலமும் பகிரப்பட்டதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக நாம் தேடுதலில் ஈடுபட்டபோது, முதலில் இது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனை உறுதிசெய்தோம்.

அதன் பின்னர் குறித்த பதிவில் பியர் கேன்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்கள் சிவநேசன் சந்திரகாந்தனுடையதா என ஆராய்ந்த போது அவரின் விருப்பு வாக்கு இலக்கம் மற்றும் கட்சி இலட்சினை உடனான குறித்த பிரச்சார ஸ்டிக்கர்கள் உண்மையானவை என தெரியவந்தது.

அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் நாம் கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரிடம் கேட்ட போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இவ்வாறான செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை எமக்கு உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட பதிவின் உண்மைத் தன்மையின் ஆராயும் நோக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் தேவராஜா அவர்களை நாம் தொடர்புகொண்டு வினவினோம்.

இதன் போது “இது தமது கட்சிக்கும், கட்சித் தலைவர் மீதும் சேறு பூசும் செயல் எனவும், இவ்வாறான ஒரு நடவடிக்கையை தாம் ஒருபோதும் மேற்கொள்ளவில்லை எனவும் இது அரசியல் இலாபத்திற்காக தனிப்பட்ட ஒரு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும்“ அவர் குறிப்பிட்டார்.

மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பான மேலதிக தகவல்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவை தொடர்புகொண்ட கேட்டபோது, இதுதொடர்பான முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதன் உண்மைத் தன்மையினை அறியும் நோக்கில் பெஃப்ரல் அமைப்பின் முறைப்பாட்டு பிரிவை தொடர்புகொண்டு விசாரித்த போது, தேர்தல் காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மேற்குறிப்பிட்ட பதிவில் உள்ளவாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தமக்கு எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என உறுதிப்படுத்தினர்.

நாம் மேலதிக தகவலினை பெற மட்டகளப்பு பொலிஸ் நிலையத்திற்கும், மட்டகளப்பு பொலிஸ் தொழில்நுட்ப பிரிவினையும் தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான எவ்விதமான முறைப்பாடுகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

குறித்த பதிவு குறித்து நாம் மேற்கொண்ட தேடுதலின் முடிவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் பிரச்சார கையேட்டை பயன்படுத்தி மக்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என்பது உறுதியாகின்றது.

Latest articles

Similar articles