2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாத் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை, கட்டாய வரிக் கோப்புகளைத் திறப்பதை இலங்கை அரசு ஒத்திவைத்துள்ளது. இந்த நடவடிக்கை புதிய தேவைக்கு இணங்க மக்களுக்கு அதிக நேரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பொதுமக்கள் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். கணக்கைத் திறப்பதற்கு உங்களுக்கு தேசிய அடையாள அட்டை மாத்திரமே தேவை” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், ஒரு நபரின் மாத வருமானம் 100,000 ரூபாயை தாண்டினால் மாத்திரமே அவர்கள் வரி செலுத்த வேண்டும்.
வருமான வரி அறவீடு தொடர்பில் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வருட ஆரம்பத்தில் புதிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
12 இலட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் ஈட்டுவோர் அல்லது தொழில் மூலம் சம்பளம் பெறுவோர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
