வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் முதலாம் திகதியும் பொது மக்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் (மார்ச் 03) கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இப்பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் இராணுவ நடவடிக்கை காரணமாக அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்று தற்போது 34 வருடங்களின் பின்னர் இவ்வாலயத்திற்கு சென்று பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஆலயங்களை புனரமைப்பதற்கும், இலகுவான முறையில் வந்து வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டுமென பொது மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
