யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் காயமடைந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது.
மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை நிலைமையை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டதோடு, நேற்றிரவு நிகழ்ச்சியின்போது பலரும் கைது செய்யப்பட்டு பின்னர் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக எமது யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
25,000, 7,000 மற்றும் 3,000 ரூபாய் என அமர்ந்து நிகழ்ச்சியை இரசிக்கும் வகையில் அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. நின்றவாறு நிகழ்ச்சியை இரசிக்க இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அனுமதிச் சீட்டு இல்லாமல் பலர் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்படுகிறது.
இதனால் தடுப்புகளை உடைத்து பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், கமராக்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு அமைக்கப்பட்ட மேடைகளிலும் இரசிகர்கள் ஏறியமையால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அமைதியின்மை ஏற்பட்டது.
