இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயக மக்களின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர் நோக்கி A9 வீதி ஊடாக நகர்ந்தபோது, போராட்டத்தை தடுக்க பொலிஸார் வீதித்தடைகளை அமைத்து தடுத்தனர்.
வீதித்தடைகளை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் செல்ல முற்பட்ட நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதன்போது மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தானும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சாதாரணமாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதானது இலங்கை அரசின் கோரமுகத்தையும் அராஜகத்தையும் சர்வதேசத்தின் கண்முன் கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வரலாற்றில் திரும்பவும் பொலிஸாரது அராஜகத்தை மீண்டும் ஒரு முறை இலங்கையில் அடையாளப்படுத்தி இருக்கின்றது. தமிழர்களுக்கு இருந்த இறைமை காலணித்துவ ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு சிங்கள அரசியல் தலைவர்களிடம் வழங்கப்பட்ட நாளான இன்றைய நாள் தமிழர்களுக்கு கறுப்பு நாளாகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்மீதான தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அறிவுறுத்தலுக்கமைவாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் ஆகியோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனான கலந்துரையாடலை அடுத்தே மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
