யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு ஓய்வு வழங்கும் நோக்கில், பணிகள் மீண்டும் ஒருமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

2025 மே 15ஆம் திகதி முதல் ஓராண்டுக்கு மேலாக மூன்று கட்டங்களாக 96 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்களிக் எலும்புக்கூடுகள் உட்பட அடையாளம் காணப்பட்ட 480 மனித எலும்புக்கூடுகளில் 479 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோரின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இளஞ்சிவப்பு நிற மழை அங்கியை போன்ற ஆடையால் பகுதியளவில் மூடப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு, ஜூலை 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டறியப்பட்டது. அந்த எலும்புக்கூடு இதுவரை அகழ்ந்து எடுக்கப்படவில்லை எனவும், நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

467 என இலக்கமிடப்பட்ட அந்த மனித எலும்புக்கூடு தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், சட்டத்தரணி ஒருவரின் ஊடாகவோ, காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் (OMP) மூலமாகவோ அல்லது நீதிமன்றப் பதிவாளருக்கோ தகவல் வழங்குமாறு வி.எஸ். நிரஞ்சன் கேட்டுக்கொண்டார்.

மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் மீண்டும் 2026 ஓகஸ்ட் 4ஆம் திகதி, யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தலைமையிலான நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Video; யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, தற்காலிகமாக நிறுத்தம்

நீதவானின் மேற்பார்வையில் தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, யாழ்ப்பாண நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில், இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புகளுக்கிடையில் ஒரே இடத்தில் ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்பட்டிருந்த 36 எலும்புக் குவியல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ள 144 பிற பொருட்களில், குழந்தைகளுக்கான பால்போத்தல், பொம்மைகள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.

 

Latest articles

Similar articles