2024 பொதுத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 667,240 (5.65%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 11,815,246
வாக்காளர் சதவீதம்: 68.93%
செல்லுபடியான வாக்குகள்: 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 667,240
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 5.65%
மூன்று பெண்கள்
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மூன்று பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை, சரோஜா போல்ராஜ் மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு 148,379 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
விருப்பு வாக்கு சாதனை
தேசிய மக்கள் சக்தி கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளரான விஜித ஹேரத்தினால் 2024 பொதுத் தேர்தலில் பெறப்பட்ட 716,715 விருப்பு வாக்குகளான இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.
இதேவேளை, கொழும்பு தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விருப்பு வாக்கு பட்டியலில் 655,289 வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்திருந்தார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 527,364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக கருதப்பட்டார்.
தோல்வியடைந்த தமிழ் தலைமைகள்
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.
இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.
அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் இராமநாதன் இம்முறை தோல்வியடைந்தார்.
கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், அவர் முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்துள்ளார்.
வன்னி மாவட்டத்தில் கடந்த முறை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட மனோ கணேசன் இந்த முறை தேர்தலில் தோல்வியை நழுவியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கடந்து முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த மயில்வாகனம் உதயகுமார் மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர்.
கண்டி மாவட்டத்தில் இருந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற வேலு குமார் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.
மட்டக்களப்பில் தோல்வி
தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் 141 ஆசனங்களைப் பெற்று 21 தேர்தல் மாவட்டங்களில் வெற்றியை தனதாக்கிய நிலையில், மட்டக்களப்பில் மாத்திரம் தோல்வியடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.
சாதனைப் படைத்த பெண்கள்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிக எண்ணிக்கையிலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13. பிரதமர் ஹரினி அமரசூரிய உட்பட 19 பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி (NPP) பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. எஞ்சிய இருவர் ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) சேர்ந்தவர்கள்.
மேலதிகமாக தேசிய மக்கள் சக்தி அதன் தேசிய பட்டியலில் மூன்று பெண்களை சேர்த்துள்ளது. எனினும் கட்சி இன்னும் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
முழு பட்டியல்:
தேசிய மக்கள் சக்தி (NPP)
• முத்துமெனிகே ரத்வத்த (திகாமடுல்ல)
• அம்பிகா சமுவேல் (பதுளை)
• நிலாந்தி கொட்டஹச்சி (களுத்துறை)
• ஒஷானி உமங்கா (களுத்துறை)
• கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன (கொழும்பு)
• சமன்மலி குணசிங்க (கொழும்பு)
• கலாநிதி ஹரினி அமரசூரிய (கொழும்பு)
• சரோஜா போல்ராஜ் (மாத்தறை)
• நிலுஷா கமகே (ரத்னபுர)
• சாகரிகா அதாவுடா (கேகாலை)
• கீதா ரத்னகுமாரி (குருநாகல்)
• ஹிருனி விஜேசிங்க (புத்தளம்)
• சதுரி கங்கானி (மொனராகலை)
• துஷாரி ஜயசிங்க (கண்டி)
• ஹசரா பிரேமதிலக்க (காலி)
• தீப்தி வாசலகே (மாத்தளை)
• அனுஷ்கா திலகரத்ன (நுவரெலியா)
• கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா)
• ஹேமாலி வீரசேகர (கம்பஹா)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)
• சமிந்த்ர கிரியெல்ல (கண்டி)
• ரோகினி குமாரி விஜேரத்னா (மாத்தளை)
