“யுத்தத்தில் அனைத்தையும் இழந்த எம்மை இந்திய மீனவர்களும் அழிக்கின்றனர்”

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற நிலையில் இந்திய மீனவர்களும் தமது வாழ்வாதாரத்தை அழிப்பதாக போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.

இலங்கை ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதம் மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரியிடமும் இந்திய அரசாங்கத்திற்கான கடிதம் இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்திடமும் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு செல்லும் வழியில் பொலிஸார் இடைமறித்ததால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. எனினும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

“இந்த நாட்டில் வாழுகின்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடத்துகிறபோது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய மீனவர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது,” என கேள்வி எழுப்பிய மீனவர்கள் “எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள்” எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Latest articles

Similar articles