“ஒருத்தரும் அழக்கூடாது, அண்ணா வாங்கோ” சாந்தனுடைய பூதவுடலுக்கு ஆரத்தி எடுத்து சகோதரி

சென்னையில் காலமான சாந்தன் என அழைக்கப்படும், தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் பூதவுடல் யாழப்பாணம் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட தனது சகோதரனின் பூதவுடலுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற சாந்தனின் சகோதரி “ஒருத்தரும் அழக்கூடாது, அண்ணா வாங்கோ” என கூறியமை அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

இதன்போது யாரும் அழாது இருந்த நிலையில் ஓம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது.

சாந்தனின் பூதவுடல் முன்னதாக யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வவுனியாவில் இன்று காலை 8 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் ஏ9 வீதி ஊடாக மாங்குளம், கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவர் உடல் நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Latest articles

Similar articles