ஐ.நா தீர்மானங்களை மீண்டும் நிராகரித்தது இலங்கை

இலங்கையின் சர்வதேச உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளை விசாரணை செய்து ஆதாரங்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் ஒத்துழைப்பதை இலங்கை மீண்டும் நிராகரிக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத் தொடரின், உயர்மட்டப் பிரிவில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, குறுகிய கால அரசியல் ஆதாயங்கள் அல்லது “உள்நாட்டு வாக்கு வங்கி அரசியலை” பேரவையின் பணிகளை முந்த அனுமதிக்க வேண்டாமென வலியுறுத்தியுள்ளார்.

“மனித உரிமைகள் நடைமுறைகளில் ஆக்கபூர்வமாக இலங்கைக்கு உள்ள அர்ப்பணிபை மீண்டும் உறுதியளிக்கும் அதேவேளை, உறுப்பு நாடுகளின் இறையாண்மையை ஒருதலைபட்சமாக மீறும் அரசியல்மயாக்கப்பட்ட நடவடிக்கைகளை நிராகரிக்கிறோம் மீண்டும் உறுதிசெய்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.

“வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை உருவாக்கிய தீர்மானங்கள் 46/1 மற்றும் 51/1 இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது. அப்படியான பொறிமுறை இந்த பேரவையை உருவாக்கிய அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது மட்டுமின்றி, அது அனைத்து நாடுகளிலும் பரந்துபட்ட அளவில் சட்ட மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும். தொடர்ந்து விரிவடைந்து வரும் இந்த பொறிமுறை பயனற்றது மட்டுமல்லாமல் இந்த பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் வளங்களை உபயோகமற்ற முறையில் செலவிட வழிவகுக்கும்.

“குறுகிய கால அரசியல் ஆதாயங்களையோ அல்லது இப்போது “உள்நாட்டு வாக்கு வங்கி அரசியல்” என்று கூறப்படுவதோ இந்த பேரவையின் முக்கியமான பணிகளை பின்னுக்கு தள்ளுவதை அனுமதிக்க வேண்டாம் என்று இந்த சபையின் உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“இந்த பேரவை ஏற்கனவே அதன் முன்னோடியான மனித உரிமைகள் பேரவையின் அதே பாதையில் வளர்ந்துவரும் நாடுகளின் மீது அளவுக்கு அதிகமாக கண்காணிப்பு மற்றும் கவனத்தை செலுத்தும் நோக்கை கடைபிடிக்கிறது. அனைவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த பேரவை, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் மீது குறிப்பிட்ட ஆணைகள் மற்றும் ஊடுருவும் வழிமுறைகளுடன், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டளவில் அரசியல்மயமாக்கப்பட்டு பிளவுபடுத்தும் வகையிலும் உள்ளது.

“எனவே அரசியல் மோதல்களைவிட பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் மூலம், இந்த உலகில் தேவைப்படும் நம்பிக்கையை கட்டியெழுப்பினால், அது நமக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் மற்றும் அதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

Similar articles