மின்சார சபை இராஜினாமா அச்சுறுத்தல்: அமைச்சரிடமிருந்து புதிய உத்தரவு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், எந்த ஒரு ஊழியரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்குமாறு, இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைகளையும் மீள அறவிடுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்களில் செலவு குறைப்பு வழிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற அடையாள வேலைநிறுத்தத்தின் போது இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

சுமார் 5,000 இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர் என்ற செய்தியின் அடிப்படையில் இந்த புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அறிக்கைக்கு அமைய, ஊழியர்களை அடக்குவதற்கு அமைச்சின் முயற்சிக்கு எதிராக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக 2024 ஜனவரி 03 முதல் நடத்தப்பட்ட இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 66 ஊழியர்களை பணி இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest articles

Similar articles