இலங்கை அரசாங்கம், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஊடாக, ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய மூன்று நிறுவனங்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.
முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 12 ஜனவரி 2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியுடன் முடிவடைந்தது.
பெறப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட பேச்சுவார்த்தைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஆரம்பக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.
இதற்கமைய Jio Platforms Ltd, Gortune International Investment Holding Ltd c/o Capital Alliance Limited மற்றும் Pettigo Comercio International LDA c/o NDB Investment Bank Ltd ஆகிய நிறுவனங்கள் தமது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளன.
ஜூலை 2023இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் குறித்த விசேட வழிகாட்டுதல்களுக்கு அமைய தகுதிகளுக்கான கோரிக்கை மதிப்பீடு செய்யப்படும்.
சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ( International Finance Corporation) ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பங்கு பரிவர்த்தனைக்கான ஆலோசகராக செயற்படுகிறது.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பாரிய நட்டத்தில் இயங்குவதால் அதனை தனியார் மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
