தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 41 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை செவ்வாய்க்கிழமை (9) நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு சமர்ப்பித்தார்.
இதனையடுத்த்து இடம்பெற்ற விவாதத்தின் முடிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்தது இடம்பெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, சுயாதீன தரப்பு ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்த அதேவேளை ஆளும் தரப்பினர் வாக்களிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
