ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஆனால் தற்போது அந்த கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 71 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணி ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடன் இணையாது எனவும், மாறாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்து, அக்கூட்டணிக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (1) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
“71 பேரை உள்ளடக்கியே புதிய கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியை எம்மால் நிறுவ முடியும்.
“இன்றிலிருந்து (நேற்றிலிருந்து) எமது புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் போது பரந்த அணியாக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் எமது அணி பலமான அணியாக செயற்பட்டு வருகின்றது.
“எமது பயணம் பொருளாதார திட்டத்துடன் கூடியதாகும். ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்களும் சிறப்பாகக் காணப்படுவதால் நாம் அவரை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாயின் மக்களுக்கு சார்பான முடிவுகளை எடுப்பது கடினமாகும்.
“இது கடினம் என்றாலும், இந்த உண்மையை நாம் எற்றுக்கொள்ள வேண்டும். நாம் இன்றிலிருந்து மக்களுக்கு உண்மைகளைக் கூறுவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். (virakesari.lk with some inputs)
