எரிபொருட்கள் விலை அதிகரிப்பு;
இன்று முதல் (1) அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (ceypetco) நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 366 ரூபாய்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 464 ரூபாய்.
ஒடோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 358 ரூபாய்.
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 475 ரூபாய்.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாய்.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) மற்றும் சினோபெக் (SINOPEC) ஆகிய நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 17 ரூபாயினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 363 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒடோ டீசல் ஒரு லீட்டருக்கான விலையை 26 ரூபாயினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 355 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு;
இதேவேளை, எரிபொருள் விலைகளில ஏற்பட்ட அதிகரிப்பை அடுத்து, இன்று முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாயில் இருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு; லாவ்ஸ் (LAUGFS)
லாவ்ஸ் (LAUGFS) எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 755 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 4,740 ரூபாயாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 305 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை ரூ.1,900 ரூபாயாகும்.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு; லிட்ரோ (LITRO)
லிட்ரோ (LITRO) எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 795 ரூபாய்.
5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,707 ரூபாய்.
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,250 ரூபாய்.
பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணம் அதிகரிப்பு
பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை பெப்ரவரி மாதம் முதல் அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை போக்குவரத்துச் சங்கம் தீர்மானித்துள்ளது.
வற் வரி அதிகரிப்பையடுத்து பாடசாலை வாகன போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை ஆரம்பித்த பின்னர் போக்குவரத்து கட்டண திருத்தம் குறித்து அறிவிக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
