நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; “கைது செய்வதை நிறுத்த முடியாது”

சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்பதற்காக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை கைது செய்வதை பொலிஸ் நிறுத்தாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசல் பிரச்சினை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தீர்க்க வேண்டிய ஒன்றாகும் எனவும், இது தமது அமைச்சுக்கான விடயம் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

“எங்கள் (பொலிஸின்) வேலை சந்தேகநபர்களைக் கைது செய்வதாகும். அவர்கள் கைது செய்யப்படும்போது, சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்பதற்காக சந்தேகநபர்களை கைது செய்வதை நிறுத்த முடியாது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் வேலை அது, அவர் அதைக் கையாளுவார். மற்ற அமைச்சுகளின் விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை.” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் போதைப்பொருள் வலையமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

தென்னகோனின் நியமனம் மற்றும் அதன் சட்டபூர்வமான தன்மை உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுக்கு அமைய, கடந்த வருடம் டிசம்பர் 17 முதல் 31 வரையான காலப்பகுதியில் 20,797 சந்தேகநபர்கள் “யுக்திய” நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,018 பேரில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன், மேலும் 1,298 சந்தேகநபர்கள் புனர்வாழ்வு திட்டங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 189 சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்படும் சந்தேகநபர்களின் பட்டியலில் இருந்த 1,625 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். (themorning.lk)

Latest articles

Similar articles