இணைய கடன் மோசடி: பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் இதோ!

கொழும்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இணைய கடன் மோசடியாளர்கள் தன்னை எவ்வாறு நெருக்கடிக்குள் சிக்கவைத்தனர் என்பதை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் விபரித்துள்ளார்.

தன்னை எவ்வாறு மேலும் மேலும் கடன்பெறச்செய்தார்கள் எனவும், தன்னால் அதனை மீள செலுத்த முடியாத நிலையேற்பட்டவேளை எவ்வாறு தன்னை அச்சுறுத்தினார்கள் என்பதை அவர் விபரித்துள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

எனது மோட்டார் சைக்கிளை திருத்தவேண்டியிருந்ததாலும் கைத்தொலைபேசிக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்தவேண்டியிருந்ததாலும் நான் அவர்களிடமிருந்து 30,000 ரூபாயினை பெற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னிடமிருந்து எனது அடையாள அட்டையின் விபரங்களையும் அடையாள அட்டையுடன் நான் காணப்படும் செல்பி படத்தையும் கேட்டனர் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி என்னை விண்ணப்படிவமொன்றை பூர்த்தி செய்யுமாறு கேட்டனர். அதன் பின்னர் அவர்கள் எனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் முதலில் கடனை பெற்ற பின்னர் நான் பெறக்கூடிய கடனை அவர்கள் அதிகரித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நான் பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய தினத்தன்றும் அதற்கு மறுநாளும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன அவர்கள் நான் பணத்தை செலுத்தவேண்டியுள்ளதை நினைவுபடுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மூன்றாவது நாள் பலரிடமிருந்து எனக்கு அச்சுறுத்தும் அழைப்புகள் வந்தன. அவர்கள் எனது படங்களும் தொலைபேசி விபரங்களும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தனர். அந்த படங்களை அம்பலப்படுத்தினால் என்ன நடக்கும் என நினைத்து பார்க்குமாறு அவர்கள் அச்சுறுத்தினர். பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது பிரச்சினை எனவும் எச்சரித்தனர்.”

தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொண்ட சோதனையின்போது ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த வாரம் கைது செய்திருந்தது.

அவர்களிடமிருந்து எட்டு கணினிகள், 13 மடிக்கணினிகள் மற்றும் 41 கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles