ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க செங்கடலுக்கு அனுப்பப்படும் ரோந்துக் கப்பலை மேம்படுத்த அரசாங்கம் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டுமென ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
கப்பல்களை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை செலவிடவும், செயற்பாட்டு செலவுகளை ஏற்கவும் அரசாங்கம் தயாராக இருந்தால், இலங்கை கடற்படை செங்கடலில் செயற்பட முடியுமென அவர் இந்த வாரம் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டதாக தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
“நாங்கள் கடல் ரோந்து கப்பல்களைப் பயன்படுத்த வேண்டும். எங்களிடம் இந்தக் கப்பல்கள் உள்ளன. போரின் கடைசிக் கட்டத்தின் போது, இலங்கை பூமத்திய ரேகைக்கு தெற்கே இருந்த விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களைப் பின்தொடர்ந்து செல்ல தீர்மானித்தது. நாங்கள் கொமடோர் ட்ராவிஸ் சின்னையாவின் (Commodore Travis Sinnaia) கீழ் ஒரு குழுவை அனுப்பினோம், ”என அவர் கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து அரபிக்கடல் ஊடாக போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக கடற்படையினர் கடற்பரப்பில் செயற்பட்டுள்ளதாக ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
வேறொருவரின் போருக்குச் செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புவது இலங்கையின் தேசிய நலனுக்கு உதவுமா என ஊடகவியலாளர் கேட்டதற்கு, செங்கடலுக்கு கப்பலை அனுப்புவதன் மூலம், கடல் சார் தொடர்புகளைப் பாதுகாப்பதில் இலங்கை சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதாக ஜெயரத்ன கூறியுள்ளார்.
“அரசாங்கம் அங்கு கவனமாக செல்ல வேண்டும். நாம் வேறொருவரின் போரில் போராடுகிறோம் என மற்றவர்கள் நம்பினால் அது பாதகமாக அமையும், கூட்டணி ரோந்துக்கு பங்களிக்கும் திறன் கொண்ட ஒரு பிராந்திய கடற்படையாக நாம் வர வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செங்கடலில் கப்பல்களை இயக்குவதற்கு இலங்கை முதலீடு செய்ய வேண்டுமென ஜெயரத்ன கூறியுள்ளார்.
“இலங்கை கடற்படை செங்கடலில் செயற்பட வேண்டும் என அரச தலைவர் விரும்புகிறார், ஆனால் அரசாங்கம் பணத்தை செலவிட விரும்புகிறதா? செயற்பாட்டு செலவுகள் இருக்கும், பராமரிப்பு செலவுகள் இருக்கும். ஒரு கடல் ரோந்து கப்பலுக்கு, ஒரு மாத கால டீசல் செலவு மாத்திரம் சுமார் 60 மில்லியன் ரூபாய். பாரிய செலவு உள்ளது, அதற்கு அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்” என ஜயரத்ன கூறியுள்ளார்.
கடற்படையை ஒரே இரவில் கட்டமைக்க முடியாது எனவும், அவை பராமரிக்கப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கூறியுள்ளார்.
“எங்களிடம் கப்பல்கள் உள்ளன, ஆனால் தேவையான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளதா? கப்பல்களை அனுப்புவதற்கு முன் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எங்களுக்கு சில புதிய உபகரணங்கள் தேவை. எங்களின் காலாவதியான சில உபகரணங்களை மாற்ற வேண்டும். இலங்கை கடற்படைக்கு கண்டறிதல் மற்றும் உறுதிப்படுத்தல் கருவிகள் தேவை. இலங்கை இந்த உபகரணங்களை விரைவாக கொள்வனவு செய்ய விரும்பினால், நெருக்கடியான கொள்வனவு விலைகளை கொடுக்க வேண்டியிருக்கும்.
“எனவே, சுமார் 35 முதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். கடற்படைக் கப்பல்கள் அங்கு இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்பினால், அரசாங்கம் செலவழிக்க வேண்டும்.”
