நோன்புக் காலம். பகல் நேர தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தார் கெங்கல்லையைச் சேர்ந்த மொஹமட் இஸ்மைல் (மார்ச் 30, 2024). இந்த வருட நோன்பு பெருநாளுக்காக அவரும் அவரது சமூகமும் தயாராகிக் கொண்டிந்தனர். “பெருநாள் வருது. ஒரு எதிர்பார்ப்பு இருக்குதான், ஆனால் ஒரு பயமும் இருக்கு. ஆறு வருசம் முன்னாடி என் கண்முன்னே என் கடையை அடிச்சி நொறுக்கினாங்க. நானும் காயப்பட்டேன். காயம் ஆறிருச்சி, கடையையும் பள்ளியோட உதவியில் திரும்பத் திறந்துட்டேன். ஆனால் மனசுக்குள் இனம்புரியா ஒரு அச்சம் இருக்கு. அல்லாட காவல்,” என்கிறார் இஸ்மைல்.
பழைய நினைவுகளில், அந்த கசப்பான அனுபவங்களில் இருந்து இன்றும் மீள முடியாது தவிப்பது அவர் மாத்திரமல்ல, அவரது சமூகமும்தான்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாத ஆரம்பத்தில், கண்டி நகரை அண்மித்த, திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன. இலங்கையில் சிறுபான்மை சமூகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிக முக்கிய தாக்குதல்களில் ஒன்றாக ‘திகன கலவரம்’ வரலாற்றில் பதிவானதை யார் மறுக்கக்கூடும்.
மார்ச் 22, 2018 அன்று தாக்குதலுக்குள்ளான சாரதி (சிங்களவர்) ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரு வாரங்களில் (மார்ச் 03, 2018) உயிரிழந்தார். அவர் முச்சக்கர வண்டியில் வந்த நான்கு (முஸ்லிம்) இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வாக்குவாதம் முற்றி மோதலில் ஈடுபட்டதால் லொறி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரையும் பொலிஸார் கைது செய்ததோடு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இலக்கு வைக்கப்பட்ட முஸ்லிம்கள்
குறித்த சிங்கள இளைஞரின் மரணம் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது. ‘மசோன் பலகாய’ அமைப்பின் அமித் வீரசிங்க, மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் அம்பிட்டிய சுமன தேரர் உட்பட தீவிர ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்கள்’ மார்ச் 04, 2018 கண்டியை வந்தடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் வாகனங்களில் கண்டிக்கு விரைந்தனர்.
“எங்களுக்கு தொலைபேசியில் அழைத்து காலியில் இருந்து அதிகாலை இரண்டு மணிக்கு ரயிலில் ஏறியவர்களும் உண்டு. மாத்தறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அக்கம் பக்கத்தினர் அல்ல. வவுனியா சிங்கள கிராமத்தில் இருந்து வேனில் வந்தவர்கள் உள்ளனர். குருநாகல் மாவத்தகமவில் இருந்து மக்கள் வந்துள்ளனர்.” என அமித் வீரசிங்க, பௌத்த தேரர்கள் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்தார். (மார்ச் 4, 2018)
மார்ச் 04 – 07 வரை இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த தனது சகோதரர் குறித்த நினைவுகளை பகிர்கிறார் உயிரிழந்த எஸ். எம். பாஸித்தின் சகோதரரான பல்வேகலை பசார், கெங்கல்லயைச் சேர்ந்த எஸ். எம். பஷால்.

“என்னுடைய சகோதரர், 25 வயதை அடைந்தவர் திருமணமும் முடித்திருக்கவில்லை, தீயினால் எங்களுடைய வீடு முழுமையாக எரிந்தது. சகோதரன் இந்த வீட்டிற்குள் இருந்துதான் இறந்தார்.” என சகோதரரின் புகைப்படத்தை காட்டி கண்ணீர் வடித்தார் பஷால்.
தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஓடி வந்தவேளை, தடுக்கி விழுந்து இன்று ஆறு வருடங்கள் கடந்தும் தனியே நடக்கக்கூட முடியாத நிலையில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும், ஹிஜ்ராபுர, ரஜவெல்ல, திகனயை சேர்ந்த ஏ. சி. எம். இர்பான் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்தார்.
“எத்தனை பேர் என்று குறிப்பிட முடியாது. அந்தளவுக்கு கணக்கெடுக்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்கு இருக்கவில்லை. வந்தவுடனே அடித்தார்கள். எங்களுடைய பள்ளியில் இரண்டு மௌலவிகள் உலமாமார்களுக்கு அடித்தார்கள். அந்த நேரத்தில் தான் நானும் சிக்குண்டேன். எஸ் டி எப் (விசேட அதிரடிப் படை) துரத்தி வந்த நேரம் அன்று தான் எனது வாழ்வு இருட்டறையானது. ஓடி வந்த வேகத்தில் தான் நான் விழுந்தேன். விழுந்த நேரம் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. விழுந்தவுடன் எழும்ப முடியாமல் போனது. அன்றில் ஆரம்பித்துதான் இந்த கால்களில் பிரச்சினை.” என்கிறார் அவர்.
இர்பானைப் போன்று பல முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் தமது வருமானத்தை மார்க்கத்தை இழக்க நேரிட்டதாக தெரிவிக்கின்றனர். இன்று ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள், பல்வேறுத் தரப்பினரின் உதவியுடன் தமது வியாபாரங்கள், வர்த்தக நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்பியுள்ளனர். வாக்குறுதி அளித்த நட்டஈட்டைக்கூட அப்போதைய அரசாங்க தமக்கு முழுமையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைக்கின்றனர்.
கண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் 2018ஆம் ஆண்டு, மார்ச் 4 முதல் 7 வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 33 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, 256 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 163 வர்த்தக நிலையங்கள், 47 வாகனங்கள் மற்றும் 20 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. (சட்டத்திற்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆய்வு)
இந்த தாக்குதல் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம தெரிவித்திருந்தார். மார்ச் 15, 2018 அன்று நியுஸ்பெஸ்ட் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் “தெல்தெனிய மற்றும் அதனை அண்மித்து இடம்பெற்ற சம்பவங்களை நாங்கள் தனிச் தனிச் சம்பவமாக கருதவில்லை. நாங்கள் அவற்றை ஒரு தொடர் நிகழ்வாக கருதுகின்றோம்.” என சுட்டிக்காட்டியிருந்தார்.
அரச ஆதரவு வன்முறை
திகன கலவரத்திற்கு அரச ஆரவு இருந்தததாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். குறிப்பாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அமைதியை நிலைநாட்ட அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவர்கள் கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“துப்பாக்கிகளும் சீருடைகளும் முஸ்லிம்களை அச்சுறுத்தின. ஏனெனில் முஸ்லிம்களை வீட்டுக்குள்ளேயே அவர்கள் துப்பாக்கியுடன் சென்று உள்ளுக்குள்ளேயே முடக்கி வைத்தனர், இராணுவத்தினரும் பொலிசாரும். அவர்கள் வெளியே வீதிக்கு இறங்க முடியாது. அவர்கள் தடுப்பரண்களை அமைத்தனர். இந்த வேளையில் தான் சிங்கள சமூகத்தின் சார்பாக வந்த காடையர்களும் காவாலிகளும் வீடுகளை தீக்கிரையாக்கி, கடைகளை பற்றவைத்து, வீட்டுக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தி தங்களுக்கு முடியுமான அநியாயங்களைச் செய்து முடித்தனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிசாரும் இராணுவமும் பாதுகாப்பை முஸ்லிம்களுக்கு கொடுக்கவில்லை, அட்டூழியங்கள் செய்வதற்கு அவர்கள் பாதுகாப்பு கொடுத்தார்களே தவிர, முஸ்லிம்களை வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள்.” என்கிறார் ஊடகவியலாளரான கும்புக்கந்துர, திகனையைச் சேர்ந்த எம். ஐ. எம். முஸாதிக்.

வன்முறையின்போது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய விடயத்தை, திகன, கும்புக்கந்துரயைச் சேர்ந்த செயினுலாப்டீன் அப்துல் அனீப் இவ்வாறு விபரிக்கின்றார்.
“உண்மையில் எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியவர்கள் தான் பாதுகாப்பாளர்கள் பொலிஸ், இராணுவம், கடற்படை. ஆனால், திகனையில் நடைபெற்ற சம்பவம், பொலிசார் கல்லெடுத்து கொடுக்கிற சந்தர்ப்பமும் இருக்கிது. அந்த பொலிஸ்காரர்கள் அந்த பொலிஸ்காரர்கள் கண்ணால் பார்த்தவண்ணம் சும்மா இருக்கிறார்கள். யாரும் அதை தடுக்கவோ இல்லை. திகன பள்ளியை அடிக்கும் போது அந்த கல்லால அடிங்கிறவங்க அந்த வன்செயலை செய்றவங்க அதை செய்து கொண்டு இருந்தாங்க.”
அதேவேளை, எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாமல் வீட்டில் இருந்த தன்னையும், தனது நண்பனையும் கைது செய்த பொலிஸார், வீதியில் இழுத்துச் சென்று கலவரத்திற்கு காரணமானவர்களுடன் தடுத்து வைத்திருந்ததோடு, சித்திரவதை செய்ததாக திகன, ஹிஜ்ராபுரவைச் சேர்ந்த எம். எம். எம். பாஷில் குறிப்பிடுகின்றார்.
“வீதி நெடுக இவர்கள் எங்களுக்கு குண்டு அடிச்சாங்க அப்படி இப்படி சொல்லி இழுத்துட்டு போனார்கள். இழுத்து கொண்டுபோய் திகனையில் ஒரு இடத்தில் வைத்து கட்டுப் போட்டாங்க. அந்த இடத்தில் கடைகளுக்கு தீவைத்த இனவாத கூட்டமும் இருந்தது. அவங்களோடத்தான் எங்களை வைத்திருந்தார்கள்.”
முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்த விடயத்தை, பாதிக்கப்பட்ட மக்கள், மார்ச் 18, 2018 அன்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அப்போதைய இஸ்லாமிய மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் அப்துல் அலீம், மார்ச் 12, 2018 அன்று நடத்திய ஊடக சந்திப்பின்போது, பாதுகாப்புப் படையினர் பார்த்துக்கொண்டிருக்கவே இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகவும் இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற வகையிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதேவேளை, வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அந்த சந்தர்பத்தில் செவ்வி ஒன்றை வழங்கிய அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸார் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார். “இதை நான் பொறுப்புடன் சொல்கிறேன். முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முதல் தலைமையகப் பரிசோதகர் வரை அனைத்து அதிகாரிகளும் செய்தது என்னவென்றால், அப்பகுதியிலுள்ள அனைத்து பௌத்த பிக்குகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, அமித் வீரசிங்கவை அழைத்து, அரசியல்வாதிகளை அழைத்து, இந்த மோதல் பொலிஸ் அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்டது என்பதை, உலகில் எங்கு வேண்டுமென்றாலும் வந்து சாட்சியமளிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவளை தனது கனவரை பொலிஸாரே திகனவிற்கு அழைத்து இந்த கலவரத்தில் ஈடுபடுத்தியதாக மகசோன் பலகாய அமைப்பின் தலைவர், அமித் வீரசிங்கவின் மனைவி ஜயங்கனி சித்தும் குமாரி கொழும்பில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். “அந்த நேரத்தில் அமீத்தை வரச் சொன்னது பொலிஸ்தான். கண்டி டி.ஐ.ஜி., அவரை அழைத்து அமித் வீரசிங்க, தயவு செய்து சிறிது நேரம் இங்கே வாருங்கள் எனக் கூறி, அவரை இந்த பிரச்சினையில் சிக்க வைத்தது கண்டி டி.ஐ.ஜி என நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.”
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினரின் பதிலை அறியும் கட்டுரையாளனான என்னுடைய முயற்சி பலனளிக்கவில்லை.
மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கலவரம் ஓய்ந்த பின்னர் பலரது அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மார்ச் 21, 2018 அன்று “கண்டி மாவட்டத்தில் மத வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை” என்ற தலைப்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, விசாரணையின் ஆரம்ப கட்டமாக, வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஆர்வமுள்ள பிற தரப்பினரிடமிருந்து எழுத்துமூல தகவல் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்படும் என அறிவித்தது.
“மனித உரிமைகள் போன்ற அமைப்புகள் வந்து வீடியோ எடுத்தார்கள். செவ்வி கண்டாங்க, எல்லாம் செய்தார்கள், நாங்களும் கண்டிக்கு எத்தனையோ தடவை போனோம், ஊருக்கும் வந்தார்கள். அவர்களாலும் எதுவும் நடக்கவில்லை.” என்கிறார் , ஹிஜ்ராபுர, திகனயைச் சேர்ந்த எம். எம். எம். பாஷில்.

மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது, சாட்சியங்களை பதிவு செய்தது எனினும் இன்றளவிலும் குறைந்தது ஒரு இடைக்கால அறிக்கைக்கூட வெளிளிவரவில்லை. கட்டுரையாளனான நான் இரண்டு முறை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மின்னஞ்சல்கள் ஊடாக அறிக்கையின் பிரதியைக் கேட்டு கோரிக்கை விடுத்தேன். எனினும் அந்த மின்னஞ்சல்களுக்கேனும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.
எவ்வாறெனினும் திகன கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் பிரதியைக் கேட்டு, ஜீ. பாலச்சந்திரன் என்ற நபர், தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைய, முழுமைப்பெறாத வரைபு (Draft) அறிக்கையின் பிரதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவருக்கு வழங்கியுள்ளது. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் குறித்த வரைபு அறிக்கை பதிவேற்றப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. (விடியல் இணையதளம்)
மறுக்கப்படும் நீதி
விசாரணைகள் நடத்தினார்கள், கைது செய்தார்கள் எனினும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என எம். எம். எம். பாஷில் மாத்திரமல்ல இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏன், இந்தத் கலவரத்தில் தனது சகோதரரை இழந்த பஷாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கூட இதுவரை நீதி கிடைக்கவில்லை.
மார்ச் 10, 2018ஆம் திகதி, இந்த கலவரத்தை தூண்டிய பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மொத்தம் 81 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 10 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்களை விடுவிக்க வேண்டுமென பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்தினால் சிலர் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் தாக்குலுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எம். எம். எம் பாஷில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அப்போதைய அரசாங்கம் அறிந்திருந்தும் இதுவரை நீதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். “ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை தாக்கிய விடயமென அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். இவர்களுக்கு அநீதி நடந்திருக்கிறது என்றால், அரசாங்கமே தலையிட்டு இந்த வழக்கை முடித்திருக்க வேண்டும்.” என்கிறார் அவர்.

இவ்வாறான ஒரு சூழலில் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த நீதிபதி ஒரு முஸ்லிம் என்பதால் அவர் முஸ்லிம் மக்களுக்கு சார்பாக செயற்படுவார் எனக் கருதி அவரை இடம்மாற்றிய சம்பவமும் பதிவானதோடு, இதற்கு நீதிச் சேவை ஆணைக்குழுவும் ஒத்துழைப்பு வழங்கியதக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் ஊடகவியலாளரான முஸாதிக்.
“அந்த நீதிமன்றத்தில் இனக்கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வந்த நீதிபதி ஒரு முஸ்லிம் நீதிபதி. ஆனால், அவருடைய நீதி பிழைக்கும் என்ற ஐயப்பட்டினாலோ என்னவோ, பௌத்த துறவிகளின் முறையீட்டினால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார், நீதிச்சேவை ஆணைக்குழு மூலமாக. அவர் கண்டி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக ஒரு சிங்கள நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணையை முன்னெடுத்துச் சென்றார்கள்.” என்கிறார் முஸாதிக்.
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன எனினும் ஆறு வருடங்கள் கழிந்தும் தீர்ப்பு வரவில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள், பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்கள், எதுவும் நடைபெறவில்லை, நடைபெற வாய்ப்பும் இல்லை என்கிறார் முஸாதிக்.
உயிர்ப் பலியெடுத்த, மில்லியன் கணக்கான சொத்துகளை அழித்தொழித்த இந்த கலவரத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒரே எதிர்ப்பார்ப்பு. கிந்தொட்டை, பேருவளை, அளுத்கமை என வரிசையாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்தப் பட்டியலில் திகனவும் இணைந்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான படுகொலைகள், தாக்குதல்கள், கலவரங்கள் ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்களில் பெரும்பாலானவைகளுக்கு பெரும்பான்மை அரசின் ஆதரவு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கிடைத்து வருகிறது என்பது பொதுவான கருத்து.
பெரும்பான்மை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நன்கு விளங்கிக்கொண்ட வடக்கு கிழக்கும் தமிழ் மக்கள் கடந்த 80 வருடங்களுக்கு மேல் அவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள், உரிமை மறுப்புகள், படுகொலைகள், இனவழிப்பு நடவடிக்கைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றனர். ஏன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும், ஐந்து வருடங்கள் கடந்தும் தமக்கு மறுக்கப்படும் நீதிக்கு ஒரு சர்வதேச நீதியையையே கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில், திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் சர்வதேசத்தின் ஊடாகவே நீதியை நிலைநாட்ட முடியுமென்கிறார் முஸாதிக்
“இலங்கையினுடைய இவ்வாறான இழப்புகளை இழப்பீடுகளை, சர்வதேச நீதியாக, சர்வதேச அணுகல் முறை மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி கூற விரும்புகிறேன். இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடைபெறுகின்ற குற்றங்களை விசாரிக்க கூடிய ஒரு பொறிமுறை, சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும். சர்வதேச பொறிமுறையாக இருக்கும் போது தான் இங்கே இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு சுபீட்சம் (நீதி) கிடைக்கும்.” என்கிறார் அவர்.
“காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்”
மார்டின் லூதர் கிங் – 1963
09 ஜூன் 2024 அன்று தமிழன் பத்திரிகையில் வெளியான கட்டுரை
கட்டுரையாளர்; பார்தீபன் சண்முகநாதன்
