போராட்டத்திற்குச் சென்ற தமிழர்களை அச்சுறுத்தி திருப்பி அனுப்பிய பொலிஸார்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருகோணமலையில் இருந்து சென்றவர்களை பாதுகாப்புத் தரப்பினர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று (04) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரு தரப்பினர் திருகோணமலையில் இருந்து பேருந்தில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வெருகல் பாலத்தில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து, பேருந்தை மறித்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர், அவர்களிடம் பேருந்து கட்டணத்திற்கான டிக்கட்டுக்களை கேட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கி, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அத்துடன், பேருந்தையும் சோதனைக்கு உட்படுத்தியதாக பேருந்தில் பயணித்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்துக்காக அவர்கள் கொண்டு சென்ற பதாதைகள் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அனைவரது விபரங்களையும் பெற்றதோடு, பேருந்து சாரதி மற்றும் நடத்துநரின் ஆவணங்களையும் பறித்து, அவ்விடத்தை மீறிச் சென்றால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வேளை, புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசியை பறித்த பொலிஸார், ஆதாரமாக எடுக்கப்பட்ட படங்கள் முதலான அனைத்தையும் அழித்துவிட்டு, கைத்தொலைபேசியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர், குறித்த பேருந்து மீண்டும் திருகோணமலை நோக்கி பயணித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளனர். அவர்களில் 43 பெண்கள், 10 ஆண்கள் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. (virakesari with some inputs)

Latest articles

Similar articles