சில பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
“சில பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக நான் அறிந்தேன். இது நிறுத்தப்பட வேண்டும். தயவு செய்து பல்கலைக்கழகங்களை அரசியல் ஆக்குவதை நிறுத்துங்கள். பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவே உள்ளன. அரசியல் அந்த நோக்கத்தில் விவாதிக்கப்படுகிறது. இருப்பினும், அது பாரபட்சமாக இருக்கக்கூடாது. நிகழ்வுகளுக்கு யார் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதை செனட் மற்றும் அதன் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்,” என அவர் கூறினார்.
1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த ஆண்டு ஓகஸ்ட் முதல் இதுவரை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் 82 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 30 பேர் மாத்திரமே பகிடிவதைக்கு உட்பட்டவர்கள் எனவும், பகிடிவதை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
பகிடிவதை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அவர்கள் பகிடிவதைக்காக கைது செய்யப்படவில்லை எனவும், சக நண்பர்கள் குழுவுடனான தனிப்பட்ட தகராறிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
