இறுதி யுத்தத்தின் மிக முக்கியமான தளபதிகளில் ஒருவரும், இலங்கை இராணுவத்தின் 20ஆவது தளபதியுமான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராகவும் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான இவர் 35 வருடங்களுக்கும் மேலாக (1980-2015) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு தலைமை தாங்கி செயற்பட்டார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1980இல் கடெற் பிரிவில் பங்காற்றி தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இலங்கை இராணுவ அகாடமியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் 1981இல் இலங்கை காலாட்படையின் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் கமாண்டோ அதிகாரிகள் பாடப்பிரிவில் காலாட்படை இளம் அதிகாரிகள் பாடநெறி மற்றும் படையணிக்கான ஆயுத ஒத்துழைப்பு கற்கைநெறியை நிறைவு செய்தார்.
புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் நாயகமாக 12,000 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்காகவும் பணியாற்றினார்.
இலங்கை இராணுவ அகாடமியின் கட்டளைத் தளபதி, ஊடகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளர் போன்ற பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
யுத்தத்திற்கு பின்னர், மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க 2013 ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
லெப்டினன் ஜெனரலாகவும் பதவியுயர்த்தப்பட்ட அவர், ஓய்வு பெற்றதும் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். (virakesari)
