தமிழீழ அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டம்: சிறுவனிடம் விசாரணை

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் வருடா வருடம் பட்டத்திருவிழாவை ஒழுங்கமைப்பவர்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றைய தினம் (28) பட்டத்திருவிழா முதன்முறையாக இடம்பெற்றிருந்தது.

அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.

இதனை அவதானித்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சிறுவனை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையில், குறித்த சிறுவனின் வீட்டிற்கு இன்றைய தினம் பொலிஸார் சென்று மீண்டும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய குறித்த சிறுவனே சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

Latest articles

Similar articles