சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டம்: முதல் கைது

பணத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலங்கையின் முதலாவது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் டொலரை மாற்றும் போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது சுமார் நான்கு இலட்ச ரூபாய் பணம் அவரிடம் காணப்பட்டுள்ளது.

அரசியல்வாதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

இரண்டு நாள் விவாதத்தின் பின்னர் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டத்தை கையெழுத்திட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கீகரித்ததன் மூலம் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள், ஊடக குழுக்கள் மற்றும் இராஜதந்திரிகள் இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்து கவலைகளை எழுப்பினர்.

சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்வேறு கவலைகள் எழுந்துள்ளதால், சட்டத்தில் திருத்தங்களை பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Latest articles

Similar articles