2 இட்சம் குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச் காணி: ஜீவனின் திட்டம்

பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதற்கென ஜனாதிபதியால் 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (09) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளரின் பங்கேற்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் எக்ஸ் தள பதிவு

பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

தேசிய சராசரியான 86% உடன் ஒப்பிடுகையில், தோட்டக் குடும்பங்களில் 8 வீதமானவர்களே சொந்த வீட்டைக் கொண்டுள்ளன. இந்த வரலாற்று அநீதியை சரிசெய்வோம்.

அரசாங்க அதிகாரிகள், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பொருத்தமான காணிகள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணுதல், வரைபடமிடுதல், அளவீடு செய்தல், பத்திரங்களை தயாரித்தல் மற்றும் அனைத்து தோட்ட குடும்பங்களுக்கும் உறுதிகளை விநியோகித்தல் போன்ற நடைமுறைகளை நாங்கள் வரையறுத்துள்ளோம்.

சில தீர்மானங்கள்

1. இத்திட்டத்தின் மூலம் 200,000 குடும்பங்கள் பயனடைவார்கள்.
2. செயல்முறையை ஒருங்கிணைக்க ஒரு செயலகம் அமைக்கப்படும்.
3. இந்த வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியினால் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

200 வருடங்களாக எமது பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட சமூகம் வாழ்வதற்கு ஓர் இடம் என்ற எளிய பாதுகாப்பைக்கூட அனுபவிக்கவில்லை.

இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் அவர்கள் இறுதியாக அனுபவிப்பதை இந்த முயற்சி உறுதி செய்கிறது. இது அவர்களின் சொந்த நிலத்தின் உறுதியையும் பாதுகாப்பையும் அவர்களின் எதிர்காலத்திற்கு கொடுக்கும். இதை வழங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

Latest articles

Similar articles