28 வருடங்களாக மறுக்கப்படும் நீதி: குமாரபுரம் படுகொலை நினைவேந்தல்

குமாரபுரம் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (11) குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.டி

இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெஹிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது, அடுத்து, இந்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி சந்தேகநபர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகள் 28 ஆண்டுகளாக தமக்கு கிடைக்கப்பெறாத நீதியினை கோரி வருகின்றனர். (virakesari)

Latest articles

Similar articles