ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில், நாட்டின் வடக்கில் தமிழர்களின் காணியை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்வதாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் காணி உரிமைப்பற்றி உரையாற்றுகையில், மன்னார் மாவட்டத்தில் மக்களின் விவசாய காணிகளை அபகரிக்கும் முயற்சியில் வனவளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி பேசியிருந்தார். 2 மில்லியன் மக்களுக்குக் காணி உரிமை வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் கிராமத்தில் உள்ள மக்களின் சொந்த காணிகளை, வனவளத் திணைக்களம் தமக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டுக் கொண்டு அடையாளப்படுத்தல் தூண்களை நாட்ட முயல்கிறது. மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி பெருமையாகப் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது மன்னார் மாவட்டத்தில் மக்களின் விவசாய காணிகள் அரச திணைக்களத்தால் அபகரிக்க முயற்சிக்கிறது. மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து காணி அபகரிப்பு முயற்சியைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது.”
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை கடந்த 7ஆம் திகதி ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் 8ஆம் திகதி உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
காணி விடுவிப்பு விவகாரத்தில் ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டிலும், அரச அதிகாரிகள் ஒரு நிலைப்பாட்டிலும் செயற்படுவதகாவும், இவ்வாறன செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தாமல் இருப்பது கேள்விக்குரியது எனவும் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியிருந்தார்.
