மன்னார் தீவில் அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் திட்டங்களினால் இலங்கை வரைபடத்தில் இருந்து மன்னார் தீவு முற்றாக நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழு உட்பட பல சிவில் அமைப்புகளால் நேற்று (26) நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இணைந்துகொண்டனர்.
எதிர்ப்புச் சுவரொட்டிகளை ஏந்தியவாறு, மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்த அதிகளவில் பெண்களை உள்ளடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மன்னார் நகரை வந்தடைந்தனர்.
மன்னார் தீவில் 36ற்கும் மேற்பட்ட அதிசக்தி வாய்ந்த காற்றாலை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் மேலும் 100ற்கும் மேற்பட்ட அதிவேக காற்றாலை கோபுரங்களை நிறுவி மன்னார் தீவை அதிசக்தி வாய்ந்த காற்றாலை பண்ணையாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். .
ஒரு காற்றாலை கோபுரத்திற்காக ஆறரை ஏக்கர் காணியை சுவீகரிக்க சட்டரீதியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்திய அவர்கள், இவ்வாறு காணி சுவீகரிப்பினால் மன்னார் தீவில் வசிக்கும் மக்கள் காணி பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
30 வருடகால யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து தவிக்கும் மன்னார் மக்கள் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தீவை கைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். மார்க்கஸ் அடிகளார் “எதிர்வரும் 50 வருடங்களுக்கு எமது தீவில் இருந்து கனிய மண்ணை எடுக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன. எமது தீவை அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம் கொண்டவர்கள் இணைந்து இதுவரை 5,000 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகளை ஏமாற்றி கொள்வனவு செய்து வைத்துக்கொண்டு அனுமதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.” எனக் குறிப்பிட்டார்.
போராட்டத்தின் நிறைவில், மாவட்ட செயலகத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.
