யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரஜை ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவேளை, அவர்கள் மீது சந்தேகம் எழுந்த காரணத்தினால் கடையில் இருந்தவர், அவர்களை சில கேள்விகள் கேட்டு விசாரித்துள்ளார்.
இதன்போது இரண்டு பாகிஸ்தானியர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, சந்தேகநபர்களில் ஒருவரான பாகிஸ்தான் பிரஜையை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கைதான சந்தேகநபர், தான் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் கச்சேரியை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தான் தங்கியிருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய மற்றுமொரு பாகிஸ்தானியர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (Virakesari with some inputs)
