மூவர் கொலை: 11 வருடங்களின் பின்னர் 7 பேருக்கு மரண தண்டனை

2012ஆம் ஆண்டு மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

3 மீனவர்களை இழுவை படகில் இருந்து கடலில் தூக்கி எறிந்து கொலை செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க முயற்சித்த சந்தேகநபர்கள் மீன்பிடி படகு ஒன்றை கடத்திச் சென்றதன் பின்னர் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.

வழக்கின் 10 ஆவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த நபரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிகே (Aditya Patabendige) உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கான மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமான ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு தலா 29 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

2012 அக்டோபர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள், இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற தேஜான் என்ற மீன்பிடி படகு கடத்தப்பட்டது.

படகிலிருந்த மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டனர், மேலும் இரு மீனவர்கள் படுகாயமடைந்து கடலில் வீசப்பட்டனர். மற்றும் படகு கடத்தப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் 11 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், வழக்கு விசாரணையின் போது மூன்று பிரதிவாதிகள் மரணமடைந்ததால், அவர்கள் இல்லாமல் 8 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில், 7 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. (Newswire and Oruvan with some inputs)

Latest articles

Similar articles