அரசியலமைப்புக்கு முரணாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றம்?

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் ஒத்துப்போகவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிய போதிலும், சட்டமூலத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும் போது, அரசாங்கத்தின் திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முரணானவை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகளின் கவலைகள் இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததால், உத்தேச சட்டமூலத்தை நிறைவேற்றுவதாக அரசாங்கம் அறிவித்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது, ஆனால் அரசாங்கம் எதிர்ப்பைப் புறக்கணித்து திருத்தங்களை அறிவித்தது சட்டமூலத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டமூலம் தொடர்பான முறையான நடைமுறையை அரசாங்கம் பின்பற்றத் தவறியதாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட ஆசிய இணையக் கூட்டமைப்பு எழுப்பிய கவலைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என அவர்கள் மேலும் குற்றம் சாட்டினர்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் செப்டெம்பர் 2023இல் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர், இலங்கையின் உச்ச நீதிமன்றம், பல சட்டமூலத்தின் விதிகள் அரசியலமைப்புடன் ஒத்துப்போகவில்லை என தீர்மானித்தது.

நவம்பர் 2023இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கு அமைய சட்டமூலத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டவுடன், குறைந்தபட்சம் 45 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த இந்த சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன, மேலும் இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக பல கவலைகள் எழுப்பப்பட்டன.

Latest articles

Similar articles