அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரச வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச உணவில் தங்கியிருப்பது போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் சுகாதார துறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்கள் அதிகம் என்பதால், மக்கள் அதிகளவில் அரச வைத்தியசாலைகளை நாடுவதாகவும், இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்களில் நோயாளிகள் இலவச உணவை கேட்பது குறைவு எனவும், அவர்களை பார்வையிட வருபவர்களிடமிருந்து அவர்களுக்கு உணவு கிடைப்பதும் இதற்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரி ஒருவர், ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பலர் தற்போது இலவச உணவையே நம்பியுள்ளதாகவும், மேலும் நோயாளிகளை பார்வையிட எவரும் வருவதும் இல்லை உவும், வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும், உணவுப்பொருட்களின் தரம் குறைவடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
உணவை விநியோகிப்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது குறித்து சிந்திப்பார்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், வைத்தியசாலைகளில் வழங்கப்படும் உணவை நம்பியிருக்கும் நிலைமையும், சுகாதார சேவையையை வழங்குவதில் சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.
வளங்கள் பற்றாக்குறை தெளிவாக தென்படுவதுடன் உணவுப்பொருட்களின் ஊட்டச்சத்து குறித்து மாத்திரமல்லாமல் இலவச உணவு தேவையை அரச வைத்தியசாலைகளில் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியுமா என்ற கரிசனையும் எழுந்துள்ளது.
இதன் காரணமாக தற்போதைய உணவு விநியோகம் குறித்து மீளாய்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த சவால்கள் காரணமாக நோயாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய நிலையில் வைத்தியசாலைகள் உள்ளனவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. (The morning and Virakesari with some inputs)
