அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றுக்காக புத்தளத்திற்குச் சென்ற நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்டம், தளுவ பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றுக்காக இராஜாங்க அமைச்சர் சென்றபோது, பிரதேச மக்கள் அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் தளுவ சந்தியில் இருந்த போது அங்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் அவரை தமது கிராமத்திற்குள் வர வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
தமது கிராமத்தில் இதுவரை எவ்வித அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், வெள்ளத்தில் தமது பயிர்கள் கூட அழிந்தபோது எந்த அரசியல்வாதியும் வந்து அது குறித்து தேடிப்பார்க்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால், எந்த அரசியல்வாதியும் கிராமத்திற்குள் வர இடமளிக்கபோவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தளுவ நிர்மலபுர தேவாலயத்தில் கூடிய பிரதேச மக்கள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்போவது இல்லை எனவும், எனினும் இதில் அரசியல்வாதிகள் பங்கேற்பதை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். (Lankadeepa)
