‘தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வழங்க முடியாது’ முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபாயை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கூட்டு ஒப்பந்த முறைக்கு மாறாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம், அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு மாறாக உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற அடிப்படையில் புதிய கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த கொடுப்பனவு தொகை எவ்வளவு என்பதை அறிவிக்கவில்லை எனவும், முதலாளிமார் சம்மேளனத்தின் இந்த முன்மொழிவை தாம் எதிர்ப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் கே. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் ஆணையாளர் தலைமையில் பெருந்தோட்ட தொழிலாளர் சம்மேளனத்துக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, ஜனாதிபதியின் பணிப்புரையின் அடிப்படையில், ஆகக்குறைந்தது 1,700 ரூபா சம்பள அதிகரிப்புடன் உற்பத்தித்திறன் கொடுப்புனவும் வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதாக கே. மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் இதுவரை இரண்டு சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (Virakesari with some inputs)

Latest articles

Similar articles