சுதந்திரமாக தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கப் போராடும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை உள்ளடக்கிய பொங்கு தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டு 23 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று நடைபெற்ற நிகழ்வை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததாக எமது பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்துகொண்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பொங்கு தமிழ் அல்லது தமிழ் எழுச்சி அறிக்கை முதன்முதலாக ஜனவரி 17, 2001 அன்று வெளியிடப்பட்டது.
இந்த பிரகடனத்தில் தமிழர்களின் அபிலாசைகளான, சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் பங்கேற்ற யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பல்கலைக்கழக மாணவர்கள் அகிம்சை வழியில் போராட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
“பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள் என்றால் பாரிய ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த மக்கள அணித்திரட்டக்கூடிய இயலுமை மாணவர் சமூகத்திற்கு காணப்படுகிறது. உங்கள் பலத்தை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். எமது மக்களின் உரிமைகளை, ஆதங்கங்களை பெற்றுக்கொடுக்கக்கூடிய வல்லமை பல்கலைக்கழக மாணவர்களுக்கே உண்டு. வன்முறையோ, ஆயுத போராட்டத்திற்கு நான் உங்களை போக சொல்லவில்லை. அஹிம்சை போராட்டங்களை செய்து இதனை சாதிக்க முடியும்.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவு தூபி, 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில், பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அப்போதைய யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரத்தினம் விக்னேஸ்வரன், பொங்கு தமிழ் நினைவுச் சின்னம் தமிழ் மக்களின் உரிமைச் சின்னம் எனத் தெரிவித்திருந்தார்.
