அபுதாபிக்கு தொழிலுக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு, உண்மையை தேடும் குடும்பம்

ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற இளைஞன் உயிரிழந்துவிட்டதாக குறித்த நபர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலியைச் சேர்ந்த 24 வயதுடைய கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

குறித்த இளைஞன் அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தினமும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

எனினும், கடந்த 6 ஆம் திகதி முதல் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அவரது தொடர்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இது தொடர்பில் குடும்ப உறவினர்கள் நேற்று முன்தினம் (16) குறித்த இளைஞன் தொடர்பில் தொழில் புரிந்த இடத்திற்கு தொடர்புகொண்டு கேட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனுக்கு எவ்வித நோய்களும் இல்லை எனவும், அவர் தொழில்புரியும் நிறுவனத்தில் அவருக்கு எதிராக எந்த பிரச்சினையும் இல்லை எனவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இளைஞனுக்கு என்ன நேர்ந்தது என்பதை விரைவில் கண்டறியுமாறும் அந்நாட்டு அரசும் பொறுப்பானவர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அரவது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest articles

Similar articles