நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்: AIC இலங்கைக்கு கடிதம்

இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆசிய இணைய கூட்டமைப்பு (AIC) வேண்டுகோள் விடுத்துள்ளது.

கூகள், மெட்டா, அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைப்பானது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அனுப்பியுள்ள 13 அம்சங்கள் அடங்கிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தொழில்துறையுடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டினாலும், சட்டமூலத்துடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்களை நிவர்த்தி செய்ய இன்னும் விரிவான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கை அவசியம். சட்டமியற்றும் செயல்முறை சிக்கலானது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும், சட்டமூலம் பயனுள்ளது மாத்திரமல்ல, அதன் நோக்கம் மற்றும் அணுகுமுறையில் சமநிலையானது, விகிதாசாரமானது மற்றும் நடைமுறைக்குரியது என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது,” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில், குறிப்பிடத்தக்க சவால்கள் காணப்படுகின்றன, இது விரிவான முறையில் கவனிக்கப்படாவிட்டால், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என ஆசிய இணைய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒழுங்குமுறை சுதந்திரம் மற்றும் வெளிநாட்டின் பயன்பாடு முதல் இடைத்தரகர்களின் பரந்த வரையறை, தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை வரையறுக்கும் தெளிவற்ற சொற்கள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிறந்த நடைமுறை தரநிலைகளில் இருந்து விலகல் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு கவலைகள் எழுந்துள்ளதாக அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக சட்ட நிச்சயமற்ற தன்மை தேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான அல்லது தீங்கு ஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Latest articles

Similar articles