சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்சினை என, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகுமென அவர் தெரிவித்துள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை (15), யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
கண்காணிப்பு விஜயத்திற்குப் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அமைச்சர், “ஒருசில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
“இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.
“அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
“முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.” என அமைச்சர் கூறியுள்ளார்.
